தேனி சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு எத்தகையது? தவறு நடந்தது எங்கே?

தேனி மாவட்ட சிறைச்சாலை
படக்குறிப்பு, தேனி மாவட்ட சிறைச்சாலை
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சிறை 2019ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தங்கும் கொள்ளளவு 200 ஆக இருந்த நிலையில் அங்கு 334 பேர் அடைக்கப்பட்டிருந்ததாக காவல் சிறைத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அக்டோபர் 26ஆம் தேதி இரவு சிறையின் மூன்றாவது பிளாக்கில் கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூச்சலிட்டு, பிறகு அங்கு வந்த பாதுகாப்பில் இருந்த காவலர்களைத் தாக்கிவிட்டு 17 பேரும் சிறையில் இருந்து தப்பியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கும் பணிகள் நடந்தன. அக்டோபர் 27ஆம் தேதி இரவு வரை 13 பேர் பிடிக்கப்பட்டதாகவும் இன்று(அக்டோபர் 18) இருவர் பிடிபட்டதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்தச் சம்பவத்தையொட்டி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இது சிறைத்துறையின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான விவாதங்களையும் எழுப்பியிருந்தது.

எத்தனை வகை சிறைகள் உள்ளன?

தமிழ்நாடு சிறைத்துறையின் கீழ் மத்திய சிறைகள், சிறப்புச் சிறைகள், மாவட்டச் சிறைகள், சிறப்புக் கிளைச் சிறைகள், கிளைச் சிறைகள் என ஐந்து வகையான சிறைகள் இயங்கி வருவதாக சிறைத் துறையின் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.

தேனியில் சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு உள்கட்டமைப்பு பற்றிய விவாதம் ஏன்?

அதன்படி, தமிழ்நாட்டில் 125 சிறைச்சாலைகள் இயங்கி வருகின்றன.

மத்திய சிறைகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், 3 மாதங்களுக்கும் மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், அதிக ஆபத்துள்ள கைதிகள், சிவில் கைதிகள் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் அடைக்கப்படுகின்றனர். சிறைக்காவல் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் இங்கே இருந்தாலும் அவர்கள் பிரித்து வைக்கப்படுவதாக சிறைத்துறை தெரிவிக்கிறது.

மாவட்டச் சிறைகளில் சிறைக்காவல் கைதிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் 3 மாதங்களுக்குக் குறைவாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்படுவார்கள். மேலும் அந்தக் குறிப்பில், "சாதாரண குற்ற வழக்குகளில் தொடர்புடைய, விசாரணைக் கைதிகள் பொதுவாக கிளைச் சிறைகளிலும் சிறப்புக் கிளைச் சிறைகளிலும் அடைக்கப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது?

மத்திய சிறைகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறைத் துறையின் கொள்கைக் குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. தீவிரக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் முக்கியமான வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை அடைத்து வைப்பதற்காக, அனைத்து மத்திய சிறைகளிலும் 'உயர் பாதுகாப்புப் பிரிவுகள்' அமைக்கப்பட்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தக் கைதிகள் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்படுவதுடன், நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளின்படி அவ்வப்போது சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். கோயம்புத்தூர் மத்திய சிறையில் வெளிவட்டப் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படை மேற்கொள்கிறது. கடலூர் மத்திய சிறையில் சிறைத்துறை பணியாளர்கள் இப்பணியைச் செய்கின்றனர். பிற மத்திய சிறைகளில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பாதுகாப்பு வழங்குகிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட சிறைகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதில் எந்தக் குறிப்பும் இல்லை.

தேனியில் சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு உள்கட்டமைப்பு பற்றிய விவாதம் ஏன்?

'நிர்வாகக் குறைபாடுகளை ஆராய வேண்டும்'

இந்தச் சம்பவத்திற்கு சிறைத் துறையினர் அலட்சியமாக இருந்தது காரணமாக இருக்கலாம் என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது பிரதானமாக கவனக் குறைவாலேயே நடந்திருக்க வேண்டும் அல்லது இதில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது விசாரணையில்தான் தெரிய வரும். சிறைச்சாலைகளில் உள்புற பாதுகாப்பு, வெளிப்புற பாதுகாப்பு எனப் பலகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும்" என்று அவர் விளக்கினார்.

மேலும், "அவை அனைத்தையும் மீறி இது எவ்வாறு நடந்தது என்பது விசாரிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் ஓர் இடத்தில் இருந்து கைதிகளால் எளிதாகத் தப்பிக்க முடிந்தால் அதிலுள்ள நிர்வாகக் குறைபாடுகளையும் ஆராய வேண்டும்" என்றார்.

இத்தகைய சம்பவங்கள் ஒரே நாளிலோ அல்லது ஒரே இரவிலோ திட்டமிடப்பட்டிருக்க முடியாது என்று கூறும் அவர் காவல்துறை பல்வேறு கோணங்களிலும் இதை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

'சிறையின் கொள்ளவை கவனித்திருக்க வேண்டும்'

தேனியில் சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு உள்கட்டமைப்பு பற்றிய விவாதம் ஏன்?
படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி

சிறையின் கொள்ளவைவிட அதிகமாக கைதிகள் இருந்தது கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு சிறைச்சாலையின் எல்லைக்கு உள்பட்ட கைதிகள்தான் அங்கு அடைக்கப்படுவார்கள். இது விசாரணைக்கும் நீதிமன்றத்திற்கும் அழைத்துச் செல்வதற்கு காவல்துறைக்கு எளிதாக இருக்கும். ஆனால் அதிகமான கைதிகள் இருப்பது சுமையென்றால் சிறைத்துறைதான் அதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" என்றார்.

சிறைத்துறையின் நிர்வாகம் மற்றும் செயல்பாடு, காவல்துறையில் இருந்து முற்றிலும் தனித்தது என்றும் குறிப்பிட்டார். காவல்துறையும் சிறைத்துறையும் பல்வேறு விஷயங்களில் மேலும் இணக்கமாகச் செயல்பட வேண்டிய தேவை இருப்பதை இது காட்டுவதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.

கைதிகள், அதிகாரிகள் என்ன நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைத் துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்ட கருணாநிதி, "இது அலட்சியம் அல்லது கவனக்குறைவு என்றால் துறை ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். யாருக்கேனும் தொடர்பு இருக்கிறது எனத் தெரிய வந்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றார்.

சிறையில் இருந்து தப்பியவர்களும் இதற்கான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதை மேலும் விளக்கிப் பேசிய அவர், "போலீஸ் காவல் அல்லது நீதிமன்றக் காவலில் இருந்து தப்பிப்பது சட்டப்படி குற்றம். அவர்கள் தற்போது எதிர்கொள்ளும் வழக்குகளோடு இந்த வழக்குகளையும் சந்திக்க வேண்டும்" என்றார்.

அத்துடன், சிறையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் கருணாநிதி, தொழில்நுட்ப வளர்ச்சி, சிசிடிவி எச்சரிக்கையுள்ள இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது பற்றி சிறைத்துறை விளக்கம் அளிக்க வேண்டிய தேவையும் இருப்பதாகத் தெரிவித்தார்.

தேனியில் சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு உள்கட்டமைப்பு பற்றிய விவாதம் ஏன்?

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரிகளிடமும் பிபிசி தமிழ் பேசியது.

தமிழ்நாட்டின் மாவட்ட சிறைகளில் துணை ஐ.ஜியாக வேலை பார்த்து ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கோரிக்கையுடன் பிபிசி தமிழிடம் பேசினார். "அனைத்து சிறைகளுக்கும் பாதுகாப்பு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவதாக மாவட்ட சிறையில் உயரமான சுற்றுச்சுவர் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள், தனித்தனி கதவுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க சிறை வளாகத்திற்கு வெளிப்புற பாதுகாப்பு வளையமும் இருக்கும்."

"இரண்டாவதாக சிறைகளில் தினசரி கணக்கெடுப்பது, ஒவ்வொரு வளாகமாகச் சென்று பரிசோதிப்பது, திடீர் சோதனை மற்றும் விசாரணை நடத்துவது ஆகியவை நடக்கும். மூன்றாவதாகத்தான் உளவு தகவல்களைச் சேகரிப்பது வரும். இது சிறைக்கு உள்ளேயும் சரி வெளியிலும் சரி கைதிகளின் நடத்தை மற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்பது மூலம் பெறப்படும்" என்றார் அவர்.

இது உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் ஏற்பட்ட தோல்வியாலும் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறிய அவர், "கைதிகள் தப்பிப்பதற்கான காரணம் மற்றும் நோக்கங்கள் வெவ்வேறாக இருக்கலாம். இதில் உளவியல் அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் விளக்கிய அந்த ஓய்வுபெற்ற அதிகாரி, "ஒன்று திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அவர்கள் திருடிய பொருட்களைப் பத்திரப்படுத்தி வைப்பதற்காக தப்பிக்க முயன்றிருக்கலாம். இரண்டாவது குடும்பத்தில் யாரேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களைப் பார்ப்பதற்காகவும் தப்பிக்க முயன்றிருக்கலாம். மூன்றாவது சிறையில் மற்ற கைதிகளால் ஏற்படும் பிரச்னைகள் அல்லது அச்சுறுத்தல்களாலும் தப்பிக்க முயலக்கூடும்" என்றார்.

தேனியில் சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு உள்கட்டமைப்பு பற்றிய விவாதம் ஏன்?
படக்குறிப்பு, கோப்புப் படம்

மேலும் அவர், "கைதிகளைப் பிரித்து தங்க வைப்பதும் அவ்வப்போது தொடர்ந்து இடம் மாற்றுவதும் சிறையில் வழக்கமாக நடக்கும். 17 பேர் தப்பியிருந்தாலும் ஒருவர் அல்லது இருவர்தான் மூளையாகச் செயல்பட்டிருப்பார்கள். இதன் பின்னணி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்றை சிறைத் துறை அமைத்துள்ளது.

"இந்த ஒரு சம்பவம் என்பதையும் கடந்து எங்கே குறைபாடுகள் ஏற்பட்டன என்பதையும் ஆராய வேண்டும். அதன் தொடர்ச்சியாக சிறைகளின் பாதுகாப்புகள் கட்டமைப்புகளை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பது தொடர்பான பரிந்துரைகள் செயல்திட்டங்களையும் உருவாக்க வேண்டும். சிறைத் துறையின் பயிற்சிக் கையேட்டில் அனைத்துவித அவசரக்கால நிலைகள் பற்றிய பயிற்சிகளும் இருக்கும். அதுதொடர்பான பயிற்சிகளை சிறைத்துறை அலுவலர்களுக்குத் தொடர்ந்து வழங்க வேண்டும்," என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

சிறைத்துறை செய்திக் குறிப்பின்படி, 200 கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 334 பேர் இருந்துள்ளனர். 2024ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட சிறைத்துறை தரவுகளின்படி தமிழ்நாட்டு சிறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அளவு 83.2% ஆக உள்ளது. அதாவது 100 கைதிகளுக்கான கட்டமைப்பு உள்ள இடத்தில் எத்தனை கைதிகள் இருக்கிறார்கள் என்பதை வைத்து இது கணக்கிடப்படுகிறது.

சிறைகளில் கைதிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதும் தப்பிக்கும் முயற்சிகளுக்கு ஒரு காரணியாக அமையலாம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார்.

"இந்த குறிப்பிட்ட சிறையில் காலிப் பணியிடங்கள் இருந்ததா என்பதைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு சிறைக்கும் அதன் கொள்ளளவுக்கு ஏற்பவே பணியிடங்கள் தீர்மானிக்கப்படும். இங்கு கைதிகள் அதிகமாக இருந்ததால் பணியாற்றல் பற்றாக்குறை இருந்ததா என்பதையும் ஆராய வேண்டும். மாவட்டச் சிறைகளில் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சில கைதிகளை மத்திய சிறைக்கு மாற்றம் செய்ய விதிகள் உள்ளன. அதை மூத்த சிறைத்துறை அதிகாரிகள் முடிவு எடுக்கலாம். அதுவும் சாத்தியமில்லையென்றால் தீவிரமான வழக்குகள் இல்லாத சர்ச்சைக்குரிய பின்னணி இல்லாத கைதிகள் இருந்தால், அவர்கள் குற்றம் சாட்ட வழக்குகளில் அதிகபட்ச தண்டனைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தை சிறையில் கழித்து இருந்தால் அவர்களைப் பிணையில் அனுப்பவும் முடிவு செய்யலாம்" என்றார்.

தேனியில் சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு உள்கட்டமைப்பு பற்றிய விவாதம் ஏன்?
படக்குறிப்பு, கோப்புப் படம்

ஓய்வுபெற்ற சிறைத்துறை துணைக் கண்காணிப்பாளர் இசக்கி முத்து, பிபிசி தமிழிடம் இதுகுறித்துப் பேசியபோது, "தமிழ்நாட்டில் சிறைகளின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், கைதிகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களால் நெரிசல் உருவாகிறது. இதற்குக் காரணம், பலர் வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்பப்படுவதுதான். இவர்களில் பலர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் அல்ல; விசாரணைக் கைதிகள். எனவே, சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை நிலையானதாக இருப்பதில்லை" என்றார்.

மேலும், "கைதிகள் சிறைக்கு வருவதும் வெளியே செல்வதுமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் மாறக்கூடும். இதை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையாகக் கருத முடியாது. இது தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் எண்ணிக்கை. இருப்பினும், சிறைகளில் கைதிகள் அதிகளவில் அடைக்கப்படுவது கவலைக்குரிய விஷயம். இதுகுறித்து மாவட்டச் சிறை அதிகாரிகள் தங்களது உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, "எந்தச் சூழலிலும் சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரே அறையில் அதிக எண்ணிக்கையிலான கைதிகளை அடைக்கும்போது, பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நிகழும்போது, சம்பந்தப்பட்ட கைதிகள் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படும்" என்று எச்சரித்தார்.

அதேபோல, "அவர்கள் தங்களுக்கான தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். தப்பிச் செல்லும் நோக்கம் கொண்டவர்கள் எனக் கருதப்படும் கைதிகள் பொதுவாகத் தனி அறையில் அடைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் இருந்தபோதிலும், தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் எதிர்பாராததும் அதிர்ச்சியளிப்பதுமான நிகழ்வு." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு