ஒரே வளாகத்தில் உலக காவல் நிலையங்களின் போலி: மோசடி மையத்தில் பிபிசி கண்டறிந்தது என்ன?

ராயல் ஹில் கேசினோவில் உள்ள பல அறைகளில் தூசு படிந்த வியட்நாமிய போலீஸ் தொப்பிகள்

பட மூலாதாரம், Lulu Luo/BBC

படக்குறிப்பு, ராயல் ஹில் கேசினோவில் உள்ள பல அறைகளில் வியட்நாமிய போலீஸ் தொப்பிகள்
    • எழுதியவர், ஜோனதன் ஹெட்
    • பதவி, தென்கிழக்கு ஆசிய செய்தியாளர்
    • எழுதியவர், லூலூ லோ மற்றும் தன்யாரத் டோக்சோன், கம்போடியாவிலிருந்து
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

ராயல் ஹில் கேசினோவிற்குப் பின்னால் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் வெளிச்சமில்லாத தாழ்வாரங்களில் நடந்து செல்லும்போது, அங்கிருக்கும் ஒவ்வொரு கதவும் ஒரு மாறுபட்ட உலகத்தைத் திறக்கின்றன.

ஓர் அறையில், வியட்நாமிய வங்கி ஒன்றின் அச்சு அசலான பிரதி உள்ளது. மற்றொன்றில், நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய காவல் நிலையத்திற்குள் இருப்பீர்கள். ஒரு மூலையில் சீன போலீஸ் அதிகாரியின் சட்டை தொங்கிக் கொண்டிருக்கிறது. சுவர்களில் ஊக்கமளிக்கும் வாசகங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு பலகையில் இருந்த சீன எழுத்துக்கள், "எல்லா இடங்களிலிருந்தும் பணம் வந்து கொண்டிருக்கிறது" என்று கூறுகின்றன. போலியான நூறு டாலர் நோட்டுகள் தரை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.

இது ஒரு பிரம்மாண்டமான மோசடி வளாகம். இது 'ஓ ஸ்மாச்'எனப்படும் எல்லை நகரத்தில், கம்போடியாவிற்குள் அமைந்திருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றினர். அவர்களது வாழ்க்கை முறை மிகக் கடுமையாக முறைப்படுத்தப்பட்டிருந்தது; அவர்கள் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் சேமிப்புப் பணத்தை மோசடி செய்து வந்தனர்.

டிசம்பர் மாதம், தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நடந்த குறுகிய கால எல்லைப் போரின்போது, ராயல் ஹில் கட்டிடம் தாய்லாந்து விமானப் படையால் குண்டுவீசித் தாக்கப்பட்டது - இந்த கேசினோவிலிருந்து கம்போடிய ட்ரோன்கள் ஏவப்பட்டதாக தாய்லாந்து தரப்பு கூறுகிறது. அங்கிருந்த தொழிலாளர்கள் உண்ணாத நூடுல்ஸ் கிண்ணங்கள், பாதி குடித்த கோக் கேன்கள் மற்றும் ஒருவித கடுமையான நெடியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இன்று, ராயல் ஹில் கேசினோ அதை ஆக்கிரமித்துள்ள தாய்லாந்து வீரர்களைத் தவிர மற்றபடி காலியாக உள்ளது. குண்டுவீச்சினால் ஜன்னல்கள் சுக்குநூறாக உடைந்துள்ளன, சில இடங்களில் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் பெரிய துளைகள் விழுந்து, அனைத்தும் தூசியால் படர்ந்துள்ளன.

கம்போடியாவிற்குள் 'ஓ ஸ்மாச்' என்ற எல்லை நகரத்தில் அமைந்திருந்த ஒரு பிரம்மாண்டமான மோசடி வளாகம்.

பட மூலாதாரம், Lulu Luo/BBC

படக்குறிப்பு, ஓ ஸ்மாச்சில் உள்ள மோசடி வளாகங்களின் ஒரு காட்சி

கம்போடியாவில் இந்த மோசடித் தொழில் எவ்வளவு பெரியதாக வளர்ந்துள்ளது என்பதை உலகுக்குக் காட்ட விரும்புவதாகக் கூறி, தாய்லாந்து ராணுவம் எங்களை அங்கு அழைத்துச் சென்றது. இந்தத் தீமையைத் தடுத்து நிறுத்த எங்களுக்குச் சர்வதேச உதவி தேவை என்று அவர்கள் எங்களிடம் கூறினர், ஆனால், டிசம்பர் மாதம் கம்போடிய இலக்குகள் மீது தாய்லாந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு இது ஒரு கூடுதல் நியாயமாகவும் அமைகிறது.

தனது எல்லைப் பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதற்கு கம்போடிய அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, சண்டை நின்றபோது இரு தரப்பு படைகளும் எந்த இடத்தில் இருந்தனவோ, அதே இடத்திலேயே தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக தாய்லாந்து வாதிடுகிறது.

ராயல் ஹில் கட்டிடத்தைப் பொறுத்தவரை வியக்கத்தக்க விஷயம் அதன் அளவு மட்டுமல்ல, தாய்லாந்து அதைக் கைப்பற்றும் வரை அதைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாமல் இருந்ததுதான்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சாலைக்கு மறுபுறம் உள்ள 'ஓ ஸ்மாச் கேசினோ' வளாகம், அங்கிருந்து தப்பியோடிய மோசடித் தொழிலாளர்கள் தங்களுக்கு நேர்ந்த சித்திரவதைகள் குறித்துப் புகார் அளித்தபோது ஏற்கனவே செய்திகளில் இடம்பெற்றிருந்தது.

அதன் உரிமையாளர் லீ யோங் பாட், கம்போடியாவின் மிகவும் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர். முன்னாள் பிரதமர் ஹுன் சென் தலைமையிலான ஆளும் 'ஹுன்' குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டவர். ஆள் கடத்தல் மற்றும் இணையவழி மோசடிகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அவர் மீது தடைகளை விதித்துள்ளன.

ஆனால், ராயல் ஹில்லின் உரிமையாளர் லிம் ஹெங் மிகவும் அடக்கியே வாசிப்பவர். சர்வதேசத் தடைகள் பட்டியலில் அவர் இடம்பெற்றதில்லை. இருப்பினும், லீ யோங் பாட்டைப் போலவே இவருக்கும் ஹுன் சென் 'நீக் ஓக்ஞா' என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியுள்ளார். இந்தப் பட்டத்தைப் பெற அவர் குறைந்தது 5,00,000 டாலர் (3,00,000 பவுண்டுகள்) நன்கொடை அளித்திருக்க வேண்டும்; இது அவரைச் சில நூறு பேரை மட்டுமே கொண்ட கம்போடியாவின் உயர்மட்டக் குழுவில் ஒருவராக்குகிறது.

அவரைப் பற்றித் தெரிந்த ஒரே ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், தாய்லாந்துடனான வடக்கு எல்லையில் உள்ள அவரது மற்றொரு கேசினோவிற்கு அருகில் இருக்கும், குரூரமான கெமர் ரூஜ் தலைவர் போல் பாட்டின் தகன இடத்திற்குச் சென்று அவர் மரியாதை செலுத்தும் வழக்கத்தைக் கொண்டிருப்பதுதான்.

1991-ல் கம்போடிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, ஆளும் குடும்பத்துடனான தங்களது நெருக்கத்தைப் பயன்படுத்தி, பெரும் நிலப்பரப்புகளைக் கையகப்படுத்தியதன் மூலமே கம்போடியாவின் பெரும்பாலான தொழிலதிபர்கள் செல்வந்தர்களானார்கள்.

ஆரம்பத்தில் அவர்கள் சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் தோட்டப் பயிர்கள் மூலம் பணம் ஈட்டினர், பின்னர் சீன முதலீட்டாளர்களால் நகரங்களில் ஏற்பட்ட சொத்து மதிப்புக் உயர்வால் பெரும் லாபமடைந்தனர்.

ஆனால், தாய்லாந்து மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகளில் சூதாட்டத் தடைகள் இருந்ததைச் சாதகமாக்கிக் கொண்டு, 'ஓ ஸ்மாச்' போன்ற எல்லைப் பகுதிகளில் இயங்கும் கேசினோக்கள் மிகவும் லாபகரமான தொழிலாக மாறின. கடந்த முப்பது ஆண்டுகளில் கம்போடிய அரசாங்கம் சுமார் 200 கேசினோ உரிமங்களை வழங்கியுள்ளது.

இவை சீனக் குற்ற கும்பல்களைக் கவர்ந்தன, அவர்கள் இந்த கேசினோக்களிலிருந்து லாபகரமான ஆன்லைன் சூதாட்டத் தொழில்களையும் நடத்தினர். ஆனால் 2019-ல், சீனாவின் அழுத்தத்தினால், ஹுன் சென் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்தார். அதைத் தொடர்ந்து கோவிட் பெருந்தொற்று பரவியதால், எல்லை தாண்டிய பயணங்களும் நின்றன.

எனவே, அந்த கும்பல்கள் ஆன்லைன் மோசடித் தொழிலுக்கு மாறின, கவர்ச்சிகரமான சம்பள வாய்ப்புகளைக் கூறி உலகம் முழுவதிலுமிருந்து இளம் தொழிலாளர்களை ஈர்த்தன.

தாங்கள் மோசடி வேலைகளைத்தான் செய்யப்போகிறோம் என்று சிலருக்குத் தெரிந்திருந்தது. மற்றவர்கள் தாங்கள் அலுவலக வேலை அல்லது கணினி மென்பொருள் நிரலாக்கம் (programming) செய்யப்போவதாக நம்பினர். ஆனால், அந்த வளாகங்களுக்குச் செல்லும் வரை அங்கு நிலவும் நிலைமைகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை மிகச் சிலரே உணர்ந்திருந்தனர்.

ராயல் ஹில்லில் சிதைந்து கிடந்த கட்டிடக் கழிவுகளுக்கு இடையில் கண்டெடுக்கப்பட்ட சீன மொழியிலான ஆவணங்களில், இலக்குகளை அடையத் தவறினால் வழங்கப்படும் தண்டனைகள் குறித்த விவரங்கள் இருந்தன. ஒரு நாளின் முடிவிற்குள் ஒரு புதிய நபரை மோசடி வலையில் சிக்க வைக்கத் தவறினால் - அதாவது ஒரு பாதிக்கப்பட்டவருடன் ஆன்லைன் தொடர்பை ஏற்படுத்தத் தவறினால் - அவர்களுக்கு ஐந்து பிரம்படி தண்டனையாக வழங்கப்பட்டது.

மூன்று நாட்களுக்குப் பிறகும் யாரையும் சிக்க வைக்கத் தவறும் ஊழியருக்குக் குறைந்தபட்சம் 10 பிரம்படிகள் வழங்கப்பட்டன. சக ஊழியர்களுடன் சாதாரணமாக உரையாடுவது அல்லது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகப் புகைப்படங்கள் போன்ற நெருக்கமான தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தவறுவது போன்றவற்றுக்கும் இதே போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன.

டிசம்பர் மாதம் தாய்லாந்து ராணுவத்தால் ராயல் ஹில் மிகக் கடுமையாக குண்டுவீசித் தாக்கப்பட்டது.

பட மூலாதாரம், Jonathan Head/ BBC

படக்குறிப்பு, டிசம்பர் மாதம் தாய்லாந்து ராணுவத்தால் ராயல் ஹில் மிகக் கடுமையாக குண்டுவீசித் தாக்கப்பட்டது.

"சிலர் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். சிலர் கருப்பு அறைக்குள் அடைக்கப்பட்டனர். அங்கு 'கருப்பு அறை' ( Black room) என்று அழைக்கப்படும் ஒரு அறை உள்ளது, அங்கு பயங்கரமான சித்திரவதைகள் நடந்தன," என்று கடந்த ஆகஸ்ட் மாதம் ராயல் ஹில்லில் வேலைக்காகச் சேர்க்கப்பட்ட உகாண்டாவைச் சேர்ந்த இளைஞரான வில்சன் கூறினார்.

மலேசியாவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை செய்யப் போவதாகத் தன்னிடம் கூறப்பட்டதாக அவர் கூறுகிறார். இப்போது கம்போடிய தலைநகர் நோம் பென்னில் (Phnom Penh) ஒரு தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருக்கும் அவரிடம் நாங்கள் பேசினோம்; அவர் தற்போது மீண்டும் உகாண்டாவிற்குச் செல்ல வழி தேடிக்கொண்டிருக்கிறார்.

தனது சீன மேலதிகாரிகளால் வழங்கப்பட்ட உரையாடல் குறிப்புகளைப் பின்பற்றி, ஒரு நாளைக்கு 15 அல்லது 16 மணிநேரம் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டதாகவும், அவர்களது குரல் மற்றும் தோற்றத்தை மாற்றியமைக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதாகவும் அவர் விவரித்தார்.

"நீங்கள் 37 வயதான, பணக்கார கணவனைத் தேடும் பெண்ணின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்த வேண்டும். வயதான அமெரிக்கர்களிடம் அவர்கள் மீது நீங்கள் காதலில் விழுந்துவிட்டதாக நம்ப வைக்கும் நோக்கத்துடன் நீங்கள் அரட்டை அடிக்க வேண்டும். அந்த உரையாடல் குறிப்பில், அவர்களை உணர்ச்சிப்பூர்வமாக உடைக்கும் ஒரு கட்டம் வரும். நீங்கள் நம்பிக்கையை வளர்த்து, பின்னர் அவர்களை அந்த தயாரிப்புகளை வாங்க வைக்க வேண்டும்."

தாய்லாந்து குண்டுவீச்சின் போது கூட தாங்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். "ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கும் போதும், சில நேரங்களில் கட்டிடம் அதிரும் போதும் நாங்கள் பயந்து வெளியே ஓடுவோம். ஆனால் பின்னர் நாங்கள் மீண்டும் உள்ளே வந்து வேலை செய்ய வேண்டியிருந்தது."

பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், வருங்கால "முதலீடுகள்" குறித்து அவர்களுக்கு உறுதியளிப்பதற்கும் பல மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இதே போன்ற மோசடித் திட்டங்களை விளக்கும் ஆவணங்களை நாங்கள் கண்டோம். அனைத்து ஊழியர்களுக்கும் விதிக்கப்பட்ட விதிகளும் அங்கு பட்டியலிடப்பட்டிருந்தன. தாமதத்திற்கு பல்வேறு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

தொழிலாளர்கள் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டியிருந்தது; தாய்லாந்து தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் ஒவ்வொரு தொழிலாளியும் எடுத்த ஒவ்வொரு கழிவறை இடைவேளையையும் பதிவு செய்யும் "ஊழியர் வெளியே செல்லும் பதிவு படிவம்" என்ற காகிதத்தை நாங்கள் பார்த்தோம், அவர்கள் கழிவறையில் எவ்வளவு நேரம் செலவழித்தார்கள் என்பது கூட அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ராயல் ஹில்லில் இருந்த ஒரு "ஊழியர் வெளியே செல்லும் பதிவு படிவம்"

பட மூலாதாரம், Lulu Luo/BBC

படக்குறிப்பு, ராயல் ஹில்லில் இருந்த ஒரு "ஊழியர் வெளியே செல்லும் பதிவு படிவம்"

அடுத்து அங்கு நடந்த மோசடிகள். ஒரு போலி பிரேசிலிய காவல் நிலையத்தின் பிரதிக்கு அருகில், ஒலிப்புகா நுரை (sound-proof foam) பொருத்தப்பட்ட வரிசையான சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேசைகளின் மீது போர்ச்சுகீசிய மொழியில் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் இருந்தன, மோசடி செய்பவர்கள் தங்களது இலக்குகளை எவ்வாறு வசியப்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை அவை நினைவுபடுத்தின.

சாவ் பாலோ காவல்துறையிடமிருந்து வந்தது போன்ற, ஒரு நபர் மீது பணமோசடி குற்றச்சாட்டை சுமத்தும் போலியான ஆனால் நம்பகமான சம்மன் ஒன்று அங்கு இருந்தது. பொதுவாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பயமுறுத்தி, பணத்தையோ அல்லது வங்கி கணக்கு விவரங்களையோ மாற்றச் செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

பல ஆண்டுகளாக, இந்த மோசடித் தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் குறித்து வளர்ந்து வரும் சர்வதேசக் கவலைகளை கம்போடிய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் புறக்கணித்தது.

ஆள் கடத்தல் குறித்த 2025-ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை, இந்த மோசடியை ஒழிக்க கம்போடிய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும், சந்தேகத்திற்குரிய மோசடி வளாகத்தை இயக்குபவர் அல்லது உரிமையாளர் எவரையும் ஒருபோதும் கைது செய்யவோ அல்லது வழக்குத் தொடரவோ இல்லை என்றும் குற்றம் சாட்டியது.

மோசடிகள் மற்றும் கட்டாய உழைப்புடன் தொடர்புடையவர் என்று கூறி செப்டம்பர் 2024-ல் லீ யோங் பாட் மீது அமெரிக்கா தடைகளை விதித்தபோது, அந்தத் தொழிலதிபர் ஒரு மூத்த உறுப்பினராக இருக்கும் ஆளும் கம்போடிய மக்கள் கட்சி, அமெரிக்கா கம்போடியாவின் இறையாண்மையை மீறுவதாகக் குற்றம் சாட்டி, அந்தத் தடைகளைத் திரும்பப் பெறுமாறு கோரியது.

மோசடி செய்பவர்கள் தங்கள் இலக்குகளை அழைத்து பேசிய சாவடிகள்

பட மூலாதாரம், Jonathan Head/BBC

படக்குறிப்பு, மோசடி செய்பவர்கள் தங்கள் இலக்குகளை அழைத்து பேசிய சாவடிகள்

ஆனால் இந்த ஆண்டு, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தத்திற்குப் பிறகு, மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கம்போடிய அரசாங்கம் திடீரென தனது போக்கை மாற்றிக்கொண்டது.

காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய டஜன் கணக்கான மோசடி வளாகங்களில் சோதனைகளை நடத்தியுள்ளன. மேலும், இந்தத் தொழில் கம்போடியாவின் பொருளாதாரம் மற்றும் நற்பெயரைச் சீரழிப்பதாகக் கூறி, ஏப்ரல் இறுதிக்குள் இது முற்றிலும் மூடப்படும் என்று பிரதமர் ஹுன் மானெட் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கடந்த ஜனவரி மாதம் சென் ஜி என்ற இளம் சீனத் தொழிலதிபரை கைது செய்து சீனாவிற்கு நாடு கடத்தியது மிக முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இவர் பெரும் மோசடி மூலம் நிதியளிக்கப்பட்ட நிறுவனங்களின் பெரிய வலையமைப்பை நடத்தி வருவதாகக் கூறி, கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் அவர் மீது தடைகளை விதித்தன.

சென் ஜி கம்போடியக் குடியுரிமையை விலைக்கு வாங்கியதுடன், ஹுன் சென்னின் தனிப்பட்ட ஆலோசகராக நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராகவும் உயர்ந்தார். அவரது 'பிரின்ஸ் குரூப்' ஒரு தேசிய வங்கி, ஒரு விமான நிறுவனம் மற்றும் பல சொத்து மேம்பாட்டு நிறுவனங்களைக் கொண்டிருந்தது.

பல ஆண்டுகளாக அவர் யாராலும் தொட முடியாதவராகத் தோன்றினார். இருப்பினும், அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முகமூடி அணிவிக்கப்பட்டுக் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில், அவரைச் சீனாவிற்கு ஏற்றிச் சென்ற விமானத்திலிருந்து அவர் இழுத்துச் செல்லப்படும் வீடியோ வெளியிடப்பட்டது. அங்கு அவர் எல்லை தாண்டிய சூதாட்டம் மற்றும் மோசடி கும்பலை நடத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

அவர் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டது, கம்போடியாவின் நற்பெயரைக் காக்க மோசடித் தொழிலில் உள்ள உயர்மட்ட நபர்கள் கூட தியாகம் செய்யப்படலாம் என்ற செய்தியை உணர்த்தியது.

அதைத் தொடர்ந்து, மோசடி வளாகங்களிலிருந்து கிடைக்கும் லாபத்தை முறைகேடாகப் பரிமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 'ஹுயோன் பே' என்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனத்தின் தலைவர் லி சியோங்கை சமீபத்தில் அதிகாரிகள் நாடு கடத்தினர்.

சென் ஜி ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Prince Holding Group

படக்குறிப்பு, சென் ஜி ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

தற்போது பல மோசடி வளாகங்கள் காலியாகக் கிடக்கின்றன. 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவிக்கிறது. வில்சனைப் போன்ற மற்றவர்கள் இன்னும் தாயகம் திரும்புவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், கம்போடியாவில் மோசடிகள் முடிவுக்கு வந்துவிட்டன என்ற அரசாங்கத்தின் கூற்றை சந்தேகிப்பதற்குப் பலத்த காரணங்கள் உள்ளன.

மோசடி வளாகங்கள் மீது சோதனை நடத்துவது என்பது 'வேக்-அ-மோல்' (whack-a-mole - ஒன்று மறைந்தால் மற்றொன்று தோன்றுவது) விளையாட்டு போன்றது என்று விவரிக்கப்படுகிறது. தொழிலாளர்களைப் புதிய, அதிகம் வெளியில் தெரியாத வளாகங்களுக்கு மாற்றுவது மிகவும் எளிதானது; மேலும் பல ஆயிரம் பேர் கம்போடியாவிலேயே தங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாக நம்பப்படுகிறது.

சென் ஜியைத் தவிர, தங்களது கேசினோக்களுக்குப் பின்னால் இத்தகைய வளாகங்களை நடத்த அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மற்ற தொழிலதிபர்கள் எவரும் இதுவரை தொடப்படவில்லை. லீ யோங் பாட், ட்ரை பிப் மற்றும் கோக் அன் ஆகியோர் வெளிநாடுகளில் தடைகளை எதிர்கொண்ட போதிலும், செல்வாக்கு மிக்க நபர்களாக இன்றும் கம்போடியாவில் வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு உச்சக்கட்ட முரணாக, மோசடி செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் புதிய சட்டத்திற்கு ஆதரவாக செனட்டர்களான லீ யோங் பாட் மற்றும் கோக் அன் ஆகியோர் வாக்களித்தனர், இந்தச் சட்டம் மோசடியில் ஈடுபடுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் என்று கம்போடிய அரசு கூறுகிறது.

ராயல் ஹில்லைக் கட்டிய தொழிலதிபர் லிம் ஹெங்கைப் பொறுத்தவரை, தாய்லாந்து ராணுவம் எல்லையைத் தாண்டி வந்து அவரது கேசினோவைக் கைப்பற்றும் வரை, மோசடித் தொழில் தொடர்பான எந்தவொரு செய்திகளிலும் அல்லது விசாரணைகளிலும் அவரது பெயர் இடம்பெற்றதே இல்லை.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு