பாஜகவை முந்திய சிஜேபி: கரப்பான் பூச்சி கட்சி பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

பட மூலாதாரம், CJP

படக்குறிப்பு, சிஜேபி பகிர்ந்த பல மீம்கள் மற்றும் குறுங்காணொளிகளில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த புகைப்படமும் அடங்கும். இதில் அந்த பகடி கணக்கின் இலச்சினை இடம்பெற்றுள்ளது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவில் பொதுவாக அரசியல் கட்சிகள் போராட்டங்களின் மூலம் உருவாகும். ஆனால் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எதிர்பாராத விதமாக சமூக ஊடகத்தில் மே 16-ஆம் தேதி அன்று தோற்றுவிக்கப்பட்டது.

ஒரு பகடியான இணைய எதிர்வினையாகவே அது தோற்றுவிக்கப்பட்டது.

மே 15-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி சூர்ய காந்த், "அமைப்பைத் தாக்கும் ஒட்டுண்ணிகள் ஏற்கெனவே சமூகத்தில் இருக்கின்றன. நீங்கள் அவர்களுடன் இணைய வேண்டுமா? வேலைவாய்ப்பைத் தேடி தங்களுடைய துறையில் ஓர் இடத்தை பிடிக்க முடியாத இளைஞர்கள் அனைத்து இடங்களிலும் கரப்பான் பூச்சி போல தங்களைப் பரப்பிக் கொள்கின்றனர்." எனத் தெரிவித்திருந்தார்.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த சூர்ய காந்த் தன்னுடைய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

"ஒரு சாதாரணமான வழக்கில் வாய்மொழியாக தெரிவித்த கருத்துகளை சில ஊடகங்கள் தவறாக சித்தரித்துள்ளதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். சட்டம் போன்ற துறைகளில் போலியான பட்டங்களின் உதவியுடன் நுழைபவர்களையே நான் குறிப்பாக விமர்சித்திருந்தேன். அப்படிப்பட்டவர்கள் ஊடகம், சமூக ஊடகம் மற்றும் இதர மதிப்புமிக்க துறைகளிலும் நுழைந்துள்ளனர். எனவே அவர்கள் ஒட்டுண்ணிகளைப் போன்றவர்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அதற்குள்ளாக கரப்பான் பூச்சியும் இந்திய அரசியலில் நுழைந்துவிட்டது. மே 16-ஆம் தேதி 30 வயதான அபிஜித் திப்கே என்பவர் எக்ஸ் தளத்தில் கூகுள் படிவம் ஒன்றை பதிவிட்டு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் இணைந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பதிவிட்ட சில மணி நேரத்திற்குள்ளாக அபிஜித் 5,000 பதிவுகளைப் பெற்றார். நகைச்சுவையாக இணையத்தில் தொடங்கப்பட்ட ஒன்று மெல்லமெல்ல மக்கள் அதிருப்தி, நகைச்சுவை மற்றும் அரசியல் ஆதங்கத்தை வெளிப்படும் ஒரு இயக்கமாக மாறியது.

அபிஜித் தற்போது அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.

இதுகுறித்து குறிப்பிட்ட அவர், "தலைமை நீதிபதி தன்னுடைய கருத்தில் இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் எனக் கூறியதற்கு எதிராக இளைஞர்களின் மாற்றுக் கருத்தை கரப்பான் பூச்சி பிரதிபலிக்கிறது. அரசமைப்பு மற்றும் கருத்து சுதந்திரத்தின் பாதுகாவலராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருதப்படும் இந்தியா போன்ற ஜனநாயகத்தில் இது ஏற்கமுடியாதது. இளைஞர்களை தலைமை நீதிபதி அவமானப்படுத்தியுள்ளார்." என்றும் தெரிவித்தார்.

பிஜேபியை முந்திய சிஜேபி

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

பட மூலாதாரம், @Cockroachisback

படக்குறிப்பு, சிஜேபி கட்சியின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட பிறகு 'Cockroachisback' என்கிற பெயரில் இன்னொரு கணக்கு உருவானது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சில நாட்களிலே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைக் கடந்தது. இன்ஸ்டாகிராமில் அக்கட்சியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்தது. இது இந்தியாவில் ஆளும் கட்சியான பாஜகவைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

சமூக ஊடகத்தில் உருவான இந்தக் கரப்பான் பூச்சி கட்சி இந்தியாவில் விவாதப் பொருளானதோடு சர்வதேச ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

பிரிட்டன் செய்தி இணையதளமான கார்டியன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பற்றி மே 21-ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்களுடைய ஆதங்கம் மற்றும் கோபத்தை வெளிப்படுத்தும் வழியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை ஏற்றுக் கொள்கின்றனர். கரப்பான் பூச்சியை தனது தேர்தல் சின்னமாகக் கொண்ட ஒரு பகடி அரசியல் கட்சி, நகைச்சுவையை தங்களுடைய போராட்ட வடிவமாக மாற்றியதன் மூலம் இந்திய சமூக ஊடக வெளியில் அபரிமிதமாக பிரபலமடைந்துள்ளது," என கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

இந்த இணைய இயக்கம் மக்களைச் சென்றடைந்துள்ள அளவு அசாதாரணமாக உள்ளது என்று அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

மேலும் அதில், "ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் அரசியல் நெருக்கடியை பகடி செய்யும் மீம்கள் மற்றும் குறுங்காணொளிகள் சமூக ஊடகம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. போராட்டம் மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாகத் திகழும், கடினமாக சூழல்களிலும் வாழும் திறனுக்காக அறியப்படும் இந்தப் பூச்சியை லட்சக்கணக்கான பயனர்கள் நகைச்சுவையாக ஏற்றுக்கொள்கின்றனர்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஜேபியின் நிறுவனர் அபிஜித் திப்கே கார்டியனிடம் கூறுகையில், "இது ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம் அல்ல. இதன் மீதான ஆர்வம், இளைஞர்களிடயே அதிகரித்து வரும் ஆதங்கத்தைக் காட்டுகிறது. அவர்கள் மிகவும் ஆதங்கமடைந்துள்ளனர். அவர்களின் பார்வையை வெளிப்படுத்த எந்த ஊடகமும் இல்லை. அரசாங்கத்தின் மீது மிகவும் கோபத்தில் உள்ளனர்." என்று கூறினார்.

தீப்கே முன்னதாக ஆம் ஆத்மி கட்சியுடன் வேலை செய்ததாக கார்டியன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் பேசிய திப்கே, "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மோதி அல்லது அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதற்கு யாரும் தயாராக இருக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது." என்றார்.

சிஜேபியை மக்கள் ஏன் ஆதரிக்கின்றனர்?

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் சமீப ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. (கோப்புப் படம்)

கத்தார் ஊடகமான அல் ஜசீரா இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், "பல முக்கிய அரசியல் தலைவர்கள் சிஜேபி பிரசாரத்தில் இணைந்துள்ளனர். இதில் மேற்கு வங்க திரிணாமுல் எம்பிக்கள் மஹுவா மொய்த்ரா மற்றும் கீர்த்தி ஆஸாத் ஆகியோரும் அடங்குவர். கரப்பான் பூச்சி கட்சியைப் பற்றி சமூக ஊடகத்தில் படித்த உடன் பதிவு செய்த முதன்மையான நபர்களில், இந்த ஆண்டு மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் ஜோஷியும் ஒருவர்." எனத் தெரிவித்துள்ளது.

அல் ஜசீரா ஊடகத்திடம் பேசிய ஜோஷி, "கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் பெரும் அளவிலான அச்சம் உள்ளது. மக்கள் எதிர்த்து பேச அச்சமடைந்திருந்தனர். சிஜேபி கட்சி ஒரு புத்துணர்ச்சியாக தெரிகிற அளவிற்கு இந்தியாவில் வெறுப்புணர்வு நிறைந்திருக்கிறது. இளைஞர்களை கரப்பான் பூச்சி உடன் ஒப்பிடுவதற்கு மறுபக்கமுல் உள்ளது. கரப்பான் பூச்சிகள் மிகவும் மீள்தன்மையுடைய உயிரினங்கள். எந்தச் சூழலிலும் அதனால் பிழைத்திருக்க முடியும்." என்றார்.

சமீப ஆண்டுகளில் ஜென் ஸி இயக்கத்தின் முக்கிய மையமாக தெற்கு ஆசியா மாறியுள்ளதாக அல் ஜசீரா செய்தி தெரிவிக்கிறது.

"இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இளைஞர்களின் இயக்கம் அரசாங்கங்களைக் கவிழ்த்திருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவும் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. இந்தியப் பொருளாதாரம் கணிசமாக வளர்ந்தாலும், சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பை நோக்கி நகர்கின்றனர். ஆனால் அவர்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் என்பது 29.1 சதவிகிதமாக உள்ளது," என்றும் அல் ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜென் ஸி இளைஞர்களின் கவலைகளுக்கு குரல் கொடுத்த ஐந்து நாட்களே ஆன ஒரு குழு இந்தியாவில் வைரலாகி உள்ளது என்று ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் குறிப்பிடுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆளும் பாஜகவைவிட அதிக ஃபாலோயர்ஸைப் (பின்தொடர்பவர்கள்) பெற்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. "சிஜேபி அரசியல், பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மையை சிறிதளவு பகடி மற்றும் நகைச்சுவை உடன் விவாதிக்கிறது. தன்னை உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகத் தெரிவித்துக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக இன்ஸ்டாகிராமில் 90 லட்சத்துக்கும் குறைவாக ஃபாலோயர்ஸையே கொண்டுள்ளது. ஆனால் சிஜேபி 2 கோடிக்கும் அதிகமாக ஃபாலோயர்ஸைப் பெற்றுள்ளது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சிஜேபியின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஊடக சுதந்திரம் தொடங்கி நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையில் பாதி இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வது வரை விவாதிக்கும் வரைகலை (கிராஃபிக்ஸ்) படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிட்டு வருகிறது. சமீபத்தில் வினாத்தாள் வெளியாகி சுமார் 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு ரத்தான விவகாரம் தொடர்பாகவும் சிஜேபி கேள்வி எழுப்பியிருந்தது." என்றும் ராய்ட்டர்ஸ் செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே நிலவும் அமைதியின்மை

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

பட மூலாதாரம், @abhijeet_dipke

படக்குறிப்பு, சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே

இந்திய இளைஞர்களிடையே நிலவும் கவலை சமீபத்தில் வெளியான டெலாய்ட் குளோபல் சர்வேயிலும் பிரதிபலித்திருப்பதை ராய்டர்ஸ் செய்தி மேற்கோள் காட்டியுள்ளது.

"இந்திய ஜென் ஸி மக்கள் தொகை, அதாவது 1995 மற்றும் 2007-க்கு இடையே பிறந்தவர்கள் போதிய வேலைவாய்ப்பு இல்லாமை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சர்வே தெரிவிக்கிறது. "ஜென் ஸி மத்தியில் நிதி நெருக்கடி தான் அதிகமாக உள்ளது. வீடு வாங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை பற்றி அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பேசுகின்றனர்," என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது."

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் அதிக இளைஞர் மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 65% பேர் 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அரசாங்க தரவுகளின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.1% ஆக உள்ளது. எனினும் 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் இடையே இந்த விகிதம் 9.9 சதவிகிதமாக உள்ளனர். இது நகர்ப்புறங்களில் 13.6 சதவிகிதமாகவும் கிராமப்புறங்களில் 8.3 சதவிகிதமாகவும் உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த செய்தி இணையதளமான கலீஜ் டைம்ஸ் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த இயக்கம் ஒரு அரசியல் கட்சியின் பெயரைக் கொண்டிருந்தாலும் அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது," என்றும் கலீஜ் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.

இந்தியா அடுத்த நேபாளம் அல்லது வங்கதேசம் ஆகுமா என்கிற கேள்விக்கு சிஜேபி நிறுவனர் சமூக ஊடகம் வாயிலாகப் பதிலளித்துள்ளார்.

"இத்தகைய ஒப்பீடுகள் மூலம் இந்தியாவின் ஜென் ஸி தலைமுறையினரை அவமதிக்கவோ குறைத்து மதிப்பிடவோ கூடாது என்பதை நான் முற்றிலும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்," என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மாற்றத்தைக் கொண்டு வர அரசமைப்புக்கு விரோதமான வழிகளை இந்திய இளைஞர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் வலியிறுத்தினார்.

"இந்த நாட்டின் இளைஞர்கள் முதிர்ச்சியான, விழிப்புணர்வுள்ள மற்றும் அரசியல் உணர்வுள்ளவர்கள். அவர்கள் தங்களின் அரசமைப்பு கடமைகளைப் புரிந்துள்ளார்கள் மற்றும் தங்களின் மாற்றுக் கருத்தை அமைதியான மற்றும் ஜனநாயகப்பூர்வ வழிகளில் வெளிப்படுத்துவார்கல்." என்றும் அபிஜித் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு