அதிமுக கடந்த முறை வென்ற இரு இடங்களிலும் 3-வது இடத்திற்கு பின்னடைவு: எதிர்காலம் பற்றி எழும் கேள்வி

அதிமுகவின் தோல்வி அதன் எதிர்காலத்தை அச்சமாக்குகிறதா?
படக்குறிப்பு, அதிமுகவின் தோல்வி அதன் எதிர்காலத்தை அச்சமாக்குகிறதா?
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுக வென்ற 2 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 3வது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அதிமுகவில் தலைமை மாற்றத்துக்கான குரலும் வலுப்பெறுமென்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி வெற்றி பெறுவதே வழக்கம் என்பதால்தான் இந்த தோல்வி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த தேர்தல் முடிவுகளின் மூலமாக, தவெக ஆட்சியின் மீது அதிருப்தி, குதிரை பேரம் போன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தவெக தேசிய செய்தித்தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு பிபிசியிடம் கூறினார்.

இதுகுறித்து அதிமுக தரப்பில் அதிருப்தியாகவுள்ள முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்களை தொடர்பு கொண்டபோது அவர்களிடம் பதில் பெற முடியவில்லை.

திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்ற அதிமுக தலைமைக்கு எதிராக நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாக பிபிசியிடம் கூறினார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

தாராபுரத்தில் 5 மாதங்களில் அதிமுக இழந்த 36 ஆயிரம் வாக்குகள்

பத்திரிகையாளர் குபேந்திரன்
படக்குறிப்பு, பத்திரிகையாளர் குபேந்திரன்

தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஒரே மாதத்துக்குள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். அந்த 6 தொகுதிகள் மற்றும் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் அவர் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருந்தன.

தேர்தல் வழக்குகள் காரணமாக, மற்ற 5 தொகுதிகளையும் தவிர்த்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து, இன்று (அக்டோபர் 9) வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாம் இடம் பிடித்துள்ள நிலையில், அதிமுக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தாராபுரம் தொகுதி வாக்குகள்

கடந்த முறை தாராபுரத்தில் 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அதிமுக, இந்த இடைத்தேர்தலில் 45,280 வாக்குகள் மட்டுமே பெற்று, கடந்த தேர்தலை விட தோராயமாக 35 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. அதிமுகவை ஒப்பிடுகையில், திமுக 7,616 வாக்குகள் மட்டுமே குறைந்து அதே இரண்டாமிடத்தில் உள்ளது. தவெக கடந்த தேர்தலை விட 20,148 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் கடந்த தேர்தலில் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அதிமுக, இந்த தேர்தலில் 21,834 வாக்குகளை இழந்து, 47,450 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. திமுக கடந்த முறை 59,838 வாக்குகள் பெற்ற நிலையில், இப்போது 54,008 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளது. கடந்த முறை 62,090 வாக்குகள் பெற்ற தவெக, இம்முறை தோராயமாக 12,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது.

மதுராந்தகம் தொகுதி வாக்குகள்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இவ்விரு தொகுதிகளிலும் கடந்த முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகி, அந்தப் பதவியை ராஜிநாமா செய்தவர்களுக்கே இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர்களிருவரும் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது, அதிமுகவின் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

பிபிசியிடம் பேசிய பத்திரிகையாளர் குபேந்திரன், ''தாராபுரத்தில் நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கையை அதிமுக துவங்கியது. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவுக்கு எதிர்காலம் இருப்பதாக பலரும் கருதிய நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் அது தவிடுபொடியாகி படுதோல்வியை அதிமுக சந்தித்துள்ளது.'' என்றார்.

''தாராபுரத்தில் வேலுமணியும், மதுராந்தகத்தில் சி.வி.சண்முகமும் தேர்தல் பணி செய்யவில்லை என்றால் அதற்கு முழு முதற்காரணம் எடப்பாடி பழனிசாமிதான். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்பு, எடப்பாடி பழனிசாமி சுதாரித்து, தனது கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்திருந்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக இன்னும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். தவெக 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது. விஜய் முதல்வராகியிருக்க முடியாது. அதனால் இன்று நடக்கின்ற பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கும் அடித்தளமிட்டது, எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகள்தான்.'' என்றார் குபேந்திரன்.

தாராபுரம் தொகுதியில் அதிமுக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது, அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பின்னடைவு என்கிறார் பத்திரிகையாளர் சிவப்ரியன். இவ்விரு தொகுதிகளை அதிமுக இழந்ததுடன் படுதோல்வி அடைந்திருப்பதால் இரு விதமான பாதகங்களை அதிமுக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

பிபிசியிடம் பேசிய சிவப்ரியன், ''இனிமேல் அதிருப்தி எம்எல்ஏக்களை அதிமுக தக்க வைப்பது கடினம். அவர்கள் தவெகவுக்கு கட்சி மாறும் வாய்ப்பு அதிகம். அதேபோன்று வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற இரண்டாம் மட்டத்தலைவர்கள், அதிமுக தலைமைக்கு எதிராக வலுவாகக் குரல் எழுப்புவார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரிக்கும்'' என்றார்.

''அதேநேரத்தில், திமுக இதுவரை வாங்கிய வாக்குகள் அனைத்தும் அதனுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது இல்லை என்பதை திமுக இந்தத் தேர்தலில் நிரூபித்துள்ளது. அதிமுக வென்ற மதுராந்தகம் தொகுதியில் சம்பந்தமேயில்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தி இரண்டாமிடம் பெற்றது திமுகவின் தனிப்பட்ட வாக்கு வங்கியைக் காண்பித்திருக்கிறது.'' என்றார் பத்திரிகையாளர் சிவப்ரியன்.

இந்த தோல்விக்குப் பின்பும் எடப்பாடி பழனிசாமி தன்னை மாற்றிக் கொள்வார் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்கிறார் பத்திரிகையாளர் குபேந்திரன். எத்தனை தோல்வி அடைந்தாலும் தன்னை மாற்றிக்கொள்ளாத பிடிவாதமான தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பதே அதிமுகவை அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்றார் அவர்.

''கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்பதை விட, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு கட்சி தன்னிடம் இருந்தால் போதுமென்ற மனநிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாறியதுதான் அதனை தற்போது இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. அவர் தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால் அவருக்கு எதிராகக் கட்சியில் மிகப்பெரிய கலகம் வெடிக்கும். ஆளும்கட்சி ஆதரவுடன் அதிமுக கட்சித்தலைமையை கைப்பற்றும் முயற்சி நடக்கும்.'' என்றார் குபேந்திரன்.

இதனை மறுக்கிறார் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஆர்.பி.உதயகுமார். இதுபோன்ற பல தோல்விகளுக்குப் பின் அதிமுக மீண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார் அவர்.

பிபிசியிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், ''இது வழக்கமான தேர்தல் முடிவுதான். தமிழகத்தில் இதுவரை நடந்த எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சிதான் வெற்றி பெற்றுள்ளது. ஆளும்கட்சிக்கு வாக்களித்தால்தான் தொகுதியில் பணிகள் நடக்கும் என்ற மக்களின் மனப்பான்மைதான் தவெக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துள்ளது. ஆனால் அதிமுக சார்பில் அவர்கள் முன்பு வாங்கிய வாக்குகளை விட குறைவாகவே வாக்குகள் பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.'' என்றார்.

அதிமுக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டதற்கு கட்சி பிரிந்து கிடப்பதுதான் காரணமென்று பலரும் கூறும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, ''அதுபற்றி இப்போது பேசவிரும்பவில்லை. ஆனால் அதிமுக மிக மோசமான தோல்வியைச் சந்திக்கவில்லை. ஆளும்கட்சி மற்றும் கூட்டணி பலத்தை எதிர்த்து இவ்வளவு வாக்குகள் வாங்கியிருப்பது, அதிமுக வாக்குவங்கி பலமாக இருப்பதையே காட்டுகிறது.'' என்றார் உதயகுமார்.

இரட்டை இலை சின்னத்துக்கும் தாராபுரம் மக்களுக்குமான பந்தம்!

பத்திரிகையாளர் சிவப்ரியன்
படக்குறிப்பு, பத்திரிகையாளர் சிவப்ரியன்

ஆனால் தாராபுரத்தில் இந்தத் தேர்தலில் அதிமுக அடைந்துள்ள தோல்வி, அக்கட்சியின் தலைமைக்குக் கிடைத்த தோல்வி என்பதற்கு முன்பு நடந்த ஓர் அரசியல் நிகழ்வுடன் பிபிசியிடம் விளக்கினார், தவெக தலைமை செய்தித்தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி.

அவருடைய கூற்றின்படி, கடந்த 1977 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், எம்ஜிஆர், தாராபுரம் தொகுதிக்கு தான் முதலில் அறிவித்த அதிமுக வேட்பாளரை வேண்டாமென்று முடிவெடுத்து வேறொரு வேட்பாளரை அறிவித்துள்ளார். ஆனால் முதலில் அறிவித்த வேட்பாளருக்குக் கட்சியின் அங்கீகாரக் கடிதம் ஏற்கெனவே தரப்பட்டுவிட்டதால், அவருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டு, எம்ஜிஆர் ஆதரவளித்த வேட்பாளருக்கு சிங்கம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனால் அந்தத் தொகுதியில் மட்டும் ''இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம், சிங்கம் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு'' எம்ஜிஆர் பிரசாரம் செய்துள்ளார். ஆனாலும் அந்தத் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் நின்ற அய்யாசாமி என்பவர் வெற்றி பெற்றார். இரட்டை இலையை அவ்வளவு நேசிக்கிற மக்கள் இருக்கும் அதிமுக கோட்டையில் அக்கட்சியை மூன்றாமிடத்துக்குக் கொண்டு சென்றதுதான் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு கிடைத்த தோல்வி என்று தெரிவித்தார் பெங்களூரு புகழேந்தி.

பிபிசியிடம் இதுபற்றி மேலும் பேசிய பெங்களூரு புகழேந்தி, ''இனியாவது எடப்பாடி பழனிசாமி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். இப்படியே பிடிவாதத்துடன் இருந்தால் கட்சியின் நிலைமை மிக மோசமாகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே மும்முனைப் போட்டி இருந்த நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு அமோகமாக வென்ற தொகுதிகளில் இந்தளவுக்கு அதிமுக தோல்வி அடைந்திருப்பது, அக்கட்சியின் தலைமைக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை.'' என்றார்.

சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் இருந்த வாக்குகளை விட, இந்த முறை வாக்காளர் எண்ணிக்கை சற்று கூடிய நிலையிலும், இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருந்தது. மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை 93.22 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 7.23 சதவீதம் குறைந்து 86.26 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாயின.

அதேபோன்று தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் 89.9 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்தத் தேர்தலில் 9.58 சதவீத வாக்குகள் குறைந்து 80.31 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாயின. இருப்பினும் தவெக பெற்றுள்ள வாக்கு சதவீதம் பெருமளவில் அதிகரித்துள்ளதற்கு, அதிமுக தலைமை மீதான நம்பிக்கையின்மையும் ஒரு காரணம் என்கிறார் தவெக தேசிய செய்தித்தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு.

பிபிசியிடம் பேசிய ஃபெலிக்ஸ் ஜெரால்டு, ''இந்த முடிவு, தவெக ஆட்சியின் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளால் வரையப்பட்ட சித்திரத்தை பொய் என்பதை நிரூபித்துவிட்டது. தவெக வாக்குவங்கி மேலும் பலம் பெற்றிருக்கிறது. திமுகவும் தனது வாக்கு வங்கியை இழந்திருந்தாலும், அதிமுகதான் பெரியளவில் வாக்குவங்கியை இழந்துள்ளது. அதிமுக மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டனர் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.'' என்றார்.

ஆனால் இந்தத் தேர்தல் அதிமுக அளவுக்கு திமுகவுக்கு பின்னடைவு இல்லை என்று கூறும் பத்திரிகையாளர் சிவப்ரியன், ''திமுகவைப் பொறுத்தவரை, வீரியமான எதிர்க்கட்சி என்பதை களத்தில் நிரூபித்துள்ளனர். திமுகவின் எதிரி நான்தான் என்று விஜய் சொல்வதுபோலவே, விஜயை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள்தான் என்பதை களத்தில் திமுக நிரூபித்துள்ளது. துருவ அரசியலில் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை காலி செய்வதில் இருவருமே இணைந்து வெற்றி பெற்றிருக்கின்றனர் என்றே தோன்றுகிறது.'' என்றார்.

''அதிமுக கரைவதால் தவெகவுக்கு பலம் என்பது ஒரு புறமிருக்க, கரைகின்ற அதிமுகவிலிருந்து திமுகவுக்கும் பலர் வர வாய்ப்புள்ளது என்ற நிலையை திமுக ஏற்படுத்தியிருக்கிறது. ஆளும்கட்சியாக இருந்து தேர்தலில் தோற்றபின்பு, அதிமுகவிலிருந்து திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வந்ததுபோன்று, ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் திமுகவுக்கும் பலர் வரவாய்ப்புள்ளது. ஏனெனில் இக்கட்சியில் எதிர்காலம் இருக்கிறது என்று அவர்கள் நம்புவார்கள். அந்த நம்பிக்கை இனி அதிமுகவுக்கு கிடைப்பது மிகவும் கடினம்.'' என்றார் சிவப்ரியன்.

காலியாக உள்ள மற்ற தொகுதிகளிலும் ராஜிநாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு?

தவெக தேசிய செய்தித்தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு.
படக்குறிப்பு, தவெக தேசிய செய்தித்தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு.

அதிமுக சார்பில் நின்று சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த இருவர்தான், தற்போது தவெக வேட்பாளராக நின்று அதே தொகுதிகளில் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இதேபோன்று கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வென்ற எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மற்றவர்களுக்கும் அக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

இதுபற்றி பிபிசியிடம் பேசிய பத்திரிகையாளர் சிவப்ரியன், ''இப்போது தவெக சார்பில் வென்ற இருவருமே தொகுதிக்குள் ஓரளவுதான் செல்வாக்குப் படைத்தவர்கள். ஆனால் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் ஏற்கெனவே பெரும் செல்வாக்குப் பெற்றவர்கள். அவர்கள் மீண்டும் நிற்பதும் வெற்றி பெறுவதும் இன்னும் எளிதாகிவிடும்.'' என்றார்.

பிபிசியிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்று தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தவருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், ''இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததுதான். தவெக ஆட்சி அமைக்கக்கூடாது என்பதற்காக திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க அதிமுக முடிவு எடுத்த அதே நாளிலேயே அதிமுகவின் தனித்துவம் தனி அடையாளம் காணாமல் போய்விட்டது. அதை எதிர்த்து நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காண்பித்துள்ளன.'' என்றார்.

''மற்ற 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தாலும் தவெக அமோக வெற்றி பெறும். இப்போது அதிமுக சார்பில் வென்று, பின் பதவியை ராஜிநாமா செய்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கியபோது, பலரும் பலவிதமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அதை நம்பவில்லை என்று மக்கள் நிரூபித்துவிட்டனர். அதனால் என்னைப் போன்ற மற்றவர்களுக்கும் கட்சித்தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது, நிச்சயமாக நாங்களும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.'' என்றார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

இவ்வாறு அதிமுக தோல்வி குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வரும் நிலையில், இந்த வெற்றி அதிகாரபலத்துக்கும் பணநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பொதுவாக இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கு சாதகமாக அமையும் என்று கூறியுள்ள அவர், தான் முதல்வராக இருந்தபோது விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், அதுபோல இந்தத் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2026 பொதுத் தேர்தலின்போது நம்முடன் இருந்த கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஒருசிலர் இந்த இடைத்தேர்தலில் நம்முடன் இல்லை. ஆனால், ஆளும் கட்சியோ பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது. இந்த இடைத் தேர்தலில் ஆளும் தவெக அனைத்து அமைச்சர்களையும் களம் இறக்கியது. அரை மணி நேரம் பேசினாலே கொத்துப் புரோட்டோ' என்று வீர வசனம் பேசிய கூட்டணி அரசின் முதல்வர் விஜய், இந்தத் தேர்தலுக்கு தெருத்தெருவாக அலைந்து விசில் ஊதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.'' என்று கூறியுள்ளார்.

''இந்த வெற்றியால் அதிமுக கோட்டையில் நுழைந்து விட்டதாக தவெக நினைக்கலாம். ஆனால், இது இடைக்கால வெற்றி மட்டுமே. இந்த தற்காலிக வெற்றியைக் கொண்டு அதிமுகவை அழித்துவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம். அதிமுக ஒரு இரும்புக்கோட்டை.'' என்றும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு