15 வயதும், 150 கிலோமீட்டர் வேகமும் - ராயல்ஸின் 'இருவர்' சன்ரைசர்ஸை வெளியேற்றியது எப்படி?

15 வயதும் & 150 கிலோமீட்டர் வேகமும் - ராயல்ஸின் 'இருவர்' சன்ரைசர்ஸை பவர்பிளேவிலேயே வீழ்த்தியது எப்படி?

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

2026 ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் குவித்தது. அதை சேஸ் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 40 ஓவர்களுமே ஆதிக்கம் செலுத்தியதா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால், இரண்டு இன்னிங்ஸ்களின் பவர்பிளேவிலும் இரண்டு வீரர்கள் செலுத்திய ஆதிக்கம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதுகெலும்பை உடைத்தது. அப்படி ஆதிக்கம் செலுத்தியவர்கள்: வைபவ் சூர்யவன்ஷி & ஜோஃப்ரா ஆர்ச்சர்.

ராயல்ஸ் பேட்டிங் செய்தபோது 15 வயது இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி, சன்ரைசர்ஸ் பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அவர் பொழிந்த சிக்ஸர் மழையில் எதிர்பார்க்க முடியாத ஸ்கோரை ஆரம்ப கட்டத்திலேயே எட்டியது ராயல்ஸ்.

அடுத்ததாக அந்த அணி பந்துவீசியபோது, மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாகப் பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் சன்ரைசர்ஸ் அணியின் டாப் ஆர்டரை மொத்தமாக பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார்.

அந்த இருவரும் பவர்பிளேவில் கொடுத்த செயல்பாட்டுக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் போட்டியில் மீண்டுவர முடியவில்லை. அப்படி அந்த இருவரும் என்ன செய்தார்கள்? பலமான சன்ரைசர்ஸ் அணியை அவர்கள் பின்தங்கவைத்தது எப்படி?

15 வயது சூர்யவன்ஷியின் அதிரடி

இந்தப் போட்டியில் 334.48 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 334.48 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார் வைபவ் சூர்யவன்ஷி

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே வைபவ் சூர்யவன்ஷி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. எல்லோருமே சூர்யவன்ஷியைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு 2 காரணங்கள் இருந்தன - இன்று, சூர்யவன்ஷி மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அந்த அணியின் சிறந்த பேட்டராக விளங்கினார். இரண்டாவது, அவர்களின் மிடில் ஆர்டர் சீராக சோபிக்கவில்லை. அதனாலும், சூர்யவன்ஷி கொடுக்கும் நல்ல தொடக்கம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களின் கடைசி 5 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. இதுபோல் கடைசி கட்டத்தில் அந்த அணி பல போட்டிகளில் தடுமாறியது. இப்படியொரு நிலையில் ஜெய்ஸ்வாலும் முன்பைப் போல் இந்த சீசன் சிறப்பாக விளையாடாத காரணத்தால்தான் சூர்யவன்ஷி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உலகின் மிகப் பெரிய டி20 தொடரில், தன்னுடைய முதல் நாக் அவுட் போட்டியில் ஆடும் அந்த 15 வயது வீரனுக்கு, தன் மீதிருந்த எதிர்பார்ப்புகள் எவ்வித நெருக்கடியையும் ஏற்படுத்திவிடவில்லை. சன்ரைசர்ஸ் தீட்டியிருந்த அத்தனை திட்டங்களையும் முறியடித்து ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார் சூர்யவன்ஷி.

சூர்யவன்ஷியின் விக்கெட்டுடைய முக்கியத்துவம் புரிந்த கம்மின்ஸ், இம்முறை வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொண்டார். இளம் பௌலர்கள் யார் கையிலும் பந்தைக் கொடுக்காமல் அவரும், இஷான் மலிங்காவும் இணைந்து பந்துவீச்சைத் தொடங்கினார்கள். ஆனால், அவர்கள் அனுபவத்தை சிறப்பாக எதிர்கொண்டார் சூர்யவன்ஷி. முதல் ஓவரில் கம்மின்ஸ் முயற்சி செய்த யார்க்கர்களை பொறுமையாகக் கையாண்ட அவர், பந்தின் லென்த் தவறியபோது தன் சிக்ஸர் அடிக்கும் வேலையைத் தொடங்கினார்.

முதலிரு ஓவர்களில் தலா 1 சிக்ஸர் விளாசிய சூர்யவன்ஷி, கம்மின்ஸ் வீசிய 3வது ஓவரில் தொடர்ச்சியாக 1 பவுண்டரியும், 3 சிக்ஸர்களும் விளாசினார். சகிப் ஹுசைன் வீசிய 4வது ஓவரிலும் 3 சிக்ஸர்கள் பறந்தன. அதன் விளைவாக பவர்பிளேவிலேயே 80 ரன்கள் எடுத்துவிட்டது ராயல்ஸ். சகிப் ஹுசைன் வீசிய 7வது ஓவரில் 1 பவுண்டரியும், சிக்ஸரும் அடித்த அந்த 15 வயது பேட்டர், பிரஃபுல் ஹிங்கே வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் விளாசினார்.

29 பந்துகளில் 97 ரன்கள் விளாசி ஆட்டமிழந்த சூர்யவன்ஷி, 16 பந்துகளிலேயே அரைசதம் கடந்திருந்தார். தன் இன்னிங்ஸில் அவர் அடித்தது 5 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள். உலகத்தர பௌலரான கம்மின்ஸுக்கு எதிராக சந்தித்த 8 பந்துகளிலே 4 சிக்ஸர்கள் அடித்திருந்தார் அவர்.

அவர் ஆட்டமிழந்த பந்து பவுண்டரியாகவோ, சிக்ஸராகவோ மாறியிருந்தால், கிறிஸ் கெய்ல்-ன் அதிவேக ஐபிஎல் சதம் (30 பந்துகளில்) என்ற சாதனையை முறியடித்திருப்பார் சூர்யவன்ஷி.

இப்படிப் பெரும் தாக்கம் ஏற்படுத்திய சூர்யவன்ஷியின் இன்னிங்ஸ் நீடித்தது என்னவோ 8 ஓவர்கள் தான். எட்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் அவர் ஆட்டமிழந்தபோது ராயல்ஸின் ஸ்கோர் 125/1. ரன்ரேட் - 15.62. அப்படியொரு அதிரடியைக் காட்டிய சூர்யவன்ஷி, அந்த 8 ஓவர்களிலேயே சன்ரைசர்ஸ் அணியைப் பின்தங்கவைத்துவிட்டார்.

இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் 680 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பை தன்வசப்படுத்தியிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் 680 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பை தன்வசப்படுத்தியிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி

சூர்யவன்ஷி செய்த சாதனைகள்

தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனுக்கான ஆரஞ்ச் கேப்பை தன்வசப்படுத்தியிருக்கிறார். இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் 680 ரன்கள் குவித்திருக்கிறார் அந்த 15 வயது வீரர். அதுவும் 242.85 என்ற மாபெரும் ஸ்டிரைக் ரேட்டில்.

இந்த வெற்றிகரமான ஐபிஎல் சீசனில் அவர் பல்வேறு சாதனைகளையும் படைத்திருக்கிறார்:

  • ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்த அன்கேப்ட் வீரர் - 680. முந்தைய சாதனை - யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 2023ல் 626 ரன்கள்
  • ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் - 65. முந்தைய சாதனை - கிறிஸ் கெய்ல்: 2012ல் 59 சிக்ஸர்கள்
  • ஒரு ஐபிஎல் சீசனில் 200+ ஸ்டிரைக் ரேட்டில் 600 ரன்களுக்கும் மேலாக எடுத்த முதல் வீரர்
  • ஒரு பிளே ஆஃப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் - 12
  • ஒரு இன்னிங்ஸில் மிகக் குறைந்த பந்துகளில் 10 சிக்ஸர்கள் விளாசியவர் - 24 பந்துகள்
  • ஒரு போட்டியின் பவர்பிளேவிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவர் - 8

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசி மிரட்டிய ஆர்ச்சர்

பவர்பிளேவிலேயே அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் என சன்ரைசர்ஸ் அணியின் டாப் 3 பேட்டர்களை வெளியேற்றினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பவர்பிளேவிலேயே அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் என சன்ரைசர்ஸ் அணியின் டாப் 3 பேட்டர்களை வெளியேற்றினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்

ராயல்ஸ் அணிக்கு பேட்டிங்கில் எப்படி சூர்யவன்ஷியோ, அதுபோல் பந்துவீச்சில் ஆர்ச்சர். அவர் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தால், அந்த அணி நன்றாக செயல்படும். இல்லையேல் எதிரணிகள் பேட்டிங் செய்வது எளிமையாகிவிடும். இந்த சீசன் அப்படித்தான் இருந்திருக்கிறது.

இந்தப் போட்டியிலும் கூட ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஸ்பெல்லைக் கடந்துவிட்டால் சேஸிங் ஓரளவு சாத்தியம் என்றே கருதப்பட்டது.

நியூ சண்டிகரில் இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சற்றும் ஒத்துழைக்கவில்லை. பேட்டிங் செய்வது மிகவும் எளிமையாக இருந்தது. அதனால் சன்ரைசர்ஸ் அணி 244 என்ற இலக்கை எட்டுவதற்கு சிறு வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது.

சன்ரைசர்ஸ் களமிறங்குவதற்கு முன்பு இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, "இந்த ஆடுகளத்தில் பௌலர்களுக்கு எதுவுமே இல்லை. இந்த இலக்கை சேஸ் செய்ய ஓரளவு வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

ஆனால், ஆர்ச்சர் அதற்கு விடவில்லை. ஆடுகளம் உதவி செய்யாவிட்டாலும் தன் வேகத்தைக் கொண்டு சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களை மிரட்டினார் அவர்.

மணிக்கு 148.5 கிலோமீட்டர் வேகத்தில் அவர் வீசிய மிரட்டல் பவுன்சரில் முதல் ஆளாக வெளியேறினார் அபிஷேக் ஷர்மா. பெரிய புல் ஷாட் அடிக்க அபிஷேக் முயற்சி செய்ய, பந்து லேசாக உரசிச் சென்று ஜுரெல் கைகளில் விழுந்தது. ஆட்டத்தின் 2வது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இந்த சீசனில் 7 போட்டிகளில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தியிருக்கிறார் ஜோஃப்ரா ஆர்ச்சர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் 7 போட்டிகளில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தியிருக்கிறார் ஜோஃப்ரா ஆர்ச்சர்

அதன்பிறகும் ஆர்ச்சர் அப்படித் தொடர்ந்து வேகமாகவே வீசினார். இஷான் கிஷன் அந்த வேகத்தைப் பயன்படுத்தி சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக அடித்தார். இந்தப் போட்டியில் 33 ரன்களை எடுத்த இஷான் கிஷன், அதில் 32 ரன்களை ஆர்ச்சருக்கு எதிராகத்தான் எடுத்தார். அதுவும் 8 பந்துகளில்.

இஷானின் இந்த அதிரடியால் ஆர்ச்சர் தன் திட்டத்தை மாற்றிவிடவில்லை. இஷானுக்கு அவர் வீசிய அந்த 9வது பந்து மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. பந்தை சரியாகக் கணிக்க முடியாமல் கவர் திசையில் கேட்ச் ஆனார் இஷான். மூன்றாவது ஓவரில் 2வது விக்கெட்டை இழந்தது சன்ரைசர்ஸ்.

தன் முதலிரு ஓவர்களிலும் தலா 1 விக்கெட்டை வீழ்த்திய ஆர்ச்சர், மூன்றாவது ஓவரிலும் விக்கெட் வீழ்த்தத் தவறவில்லை. இம்முறை ஆர்ச்சரின் வேகத்துக்கு இரையானது டிராவிஸ் ஹெட். மணிக்கு 150.4 கிலோமீட்டர் வேகத்தில் வந்த பந்து, ஆஃப் ஸ்டம்பை சாய்த்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் புகழ்பெற்ற டாப் 3 பேட்டர்களை தன் ஒரே ஸ்பெல்லில் காலி செய்தார் ஆர்ச்சர்.

நாந்த்ரே பர்கர் வீசிய இன்னிங்ஸின் 4வது ஓவரில் ஸ்மரன் அவுட் ஆகியிருந்தார். அதனால் ஹெட் வெளியேறியபோது சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 57/4 என்றானது. 244 என்ற பெரும் இலக்கை சேஸ் செய்த அந்த அணியின் முதுகெலும்பை பவர்பிளேவுக்குள்ளேயே உடைத்து பின்தங்கவைத்தார் ஆர்ச்சர்.

அடுத்தது குவாலிஃபயர் 2

வைபவ் சூர்யவன்ஷி, ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி குவாலிஃபயர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். வெள்ளிக்கிழமை (மே 29) இதே நியூ சண்டிகரில் நடக்கும் அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல்ஸ். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்ளும்.

நியூ சண்டிகரில் இதுவரை விளையாடிய 4 ஐபிஎல் போட்டிகளிலுமே ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு