தவெகவுக்கு கை கொடுத்த காங்கிரஸின் நிபந்தனையும் 'இந்தியா' கூட்டணியின் எதிர்காலமும்

விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த பத்தாண்டுகளாக பல தேர்தல்களை ஒன்றாக சேர்ந்து களம்கண்ட திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் ஒருபிரிவினர் வெளிப்படையாகவே விருப்பம் தெரிவித்த நிலையில், தவெகவுக்கு தற்போது அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.

"தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கான முடிவு" என சில நிபுணர்கள் இதை பார்த்தாலும், "இதுவொரு சந்தர்ப்பவாத முடிவு, கொள்கை ரீதியிலானது அல்ல" என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு தேர்தலை சந்தித்த விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது.

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்த காங்கிரஸ் 5 தொகுதிகளை வென்றுள்ளது.

காங்கிரஸ் வைத்த நிபந்தனை

''இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளைக் கூட்டணியில் இருந்து வெளியே வைக்க வேண்டும்'' என்கிற நிபந்தனையுடன் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பெயரில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது ஏன்?
படக்குறிப்பு, பொறுப்பு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்

" தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். அடிமட்ட அளவில் பலப்படுத்த நினைக்கின்றனர்." என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

கிரிஷ் சோடங்கர் தன் அறிக்கையில், "இந்தக் கூட்டணி பரஸ்பர மரியாதை, சரியான பங்கு பகிர்வு, இரு கட்சிகளின் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமின்றி, எதிர்கால உள்ளாட்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் தொடரும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் வரை காங்கிரஸ் தன் ஆதரவை நீட்டித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பத்திரிகையாளர் மாலன், "உள்ளாட்சி தேர்தல் முதல் மக்களவை தேர்தல் வரை காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளித்திருப்பது, அடுத்தடுத்த தேர்தல்களில் அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்ற விருப்பம் காரணமாக இருக்கலாம். விஜயுடன் சேரும்போது அது எளிதாக இருக்கும் என நினைக்கின்றனர். மேலும், திமுகவுக்கு தங்களின் எதிர்கால நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக கூட இதனை சொல்லியிருக்கலாம்." என்றார்.

தமிழ்நாட்டில் திமுகவின் மிகப்பெரிய கூட்டணி கட்சியாக காங்கிரஸ் நீண்ட காலமாக இருந்துவந்தது.

இந்திரா காந்தி காலத்திலிருந்து தற்போது ராகுல் காந்தி வரை திமுக - காங்கிரஸ் உறவு இடையிடையே சில பிளவுகள் இருந்தாலும் நீண்ட காலத்துக்கு நீடித்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இருவருக்கும் இடையேயான பிணைப்பும் தமிழ்நாட்டில் பலமுறை பேசுபொருளாகியுள்ளது. இருவரும் தங்களை சமூக ஊடகங்கள், மேடைகளில் "சகோதரர்" என பரஸ்பரம் அழைத்துள்ளனர்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி

திமுக-காங்கிரஸ் கூட்டணியின் கடந்த 20 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கொண்டால், 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இந்தக் கூட்டணி 2011 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடர்ந்தது.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. அந்தத் தேர்தலை காங்கிரஸ் தனித்து சந்தித்தது.

அதன் பிறகு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்தன. அதைத் தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்தக் கூட்டணி தொடர்ந்தது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் "ஆட்சியில் பங்கு" என்ற காங்கிரஸின் கோரிக்கையால் திமுகவுடன் கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தாலும் நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இரு கட்சிகளும் சேர்ந்தே போட்டியிட்டன.

மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி (கோப்புப்படம்)

திமுக விமர்சனம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இதை முதுகில் குத்துவது என நாங்கள் கூறுகிறோம். வெற்றிச் சான்றிதழ் வருவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி அணி மாற முடிவெடுத்துள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் திருப்திகரமானதாக இல்லை." என்றார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம், "காங்கிரஸால் திமுக எந்த பலனையும் பெறவில்லையா? காங்கிரஸ் கட்சியில் தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணிக்கு செல்லுமாறு பலரும் அடம்பிடித்தனர். திமுக தானே எங்களுடன் வரவேண்டும் என கூறினர். பலன் இல்லையென்றால் எதற்கு அழைக்க வேண்டும்? இரு தரப்பும் பலன் அடைந்திருக்கிறது. எங்களுக்கு தமிழ்நாட்டில் வாக்கு வங்கியே இல்லையா?" என்றார்.

ஆனால், திமுக கூட்டணியிலிருந்து வெளியேற காங்கிரஸ் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்ததாகவும் அது தற்போது நிகழ்ந்திருப்பதாகவும் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.

"முன்பு காங்கிரஸ் கட்சிக்கு வேறொரு கூட்டணிக்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், அதிமுக பாஜகவுடன் இருந்தது. மாற்று வாய்ப்பாக தவெகவை பார்க்கின்றனர். தேர்தலில் திமுகவிடமிருந்து வாக்குகளை வாங்கிக்கொண்டு அரசியலுக்காக தவெகவுடன் செல்கின்றனர்." என்றார்.

முந்தைய தேர்தல்களில் திமுகவுடனான கூட்டணியில் காங்கிரஸ் பலன்களை பெற்றுக்கொண்டு தற்போது தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அவர் விமர்சிக்கிறார்.

சரவணன் அண்ணாதுரை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சரவணன் அண்ணாதுரை

"காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது"

மாநிலத்தில் உள்ள பெரிய கட்சிகளை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்வதாகவும் விமர்சித்த இளங்கோவன் ராஜசேகரன்," 'இந்தியா' கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எதிரான வேலைகளை காங்கிரஸ் செய்தது. காங்கிரஸ் மீது மாநில கட்சிகள் கசப்புணர்வை அடைந்துள்ளன. இத்தகைய நிலைப்பாட்டால் பாஜக கூட்டணிக்கு எந்த காலத்திலும் மாற்றாக காங்கிரஸ் கட்சியால் உருவாக முடியாது. காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்துவிட்டனர்." என்கிறார்

"ஆனால், பிகாரில் நாங்கள் தேஜஸ்வி யாதவுடன் உடன் நின்றோம்." எனக் கூறுகிறார் காங்கிரஸின் மோகன் குமாரமங்கலம்.

காங்கிரஸின் இந்த முடிவால் அவர்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழலாம் என்ற கருத்தையே வலியுறுத்துகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

ஆனாலும், "காங்கிரஸ் கட்சியில் இளம் தலைமுறை தலைவர்களுடன் மூத்த தலைவர்கள் ஒத்துப்போகவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்த நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் திமுக 1967ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்ததில்லை. இப்போது அந்த நிலை மாறலாம்." என்றார்.

ஆனால், அமைச்சரவையில் பங்கு என்பது தங்களின் ஒரு நிபந்தனையாக இல்லை என்கிறார், காங்கிரஸின் மோகன் குமாரமங்கலம்.

விஜய்

பட மூலாதாரம், X/TVK

பாஜக குறித்த தவெகவின் நிலைப்பாடு

"இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகள்" இந்த கூட்டணியில் சேரக்கூடாது என்று காங்கிரஸ் விதித்துள்ள நிபந்தனை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்கிறார், இளங்கோவன் ராஜசேகரன்.

"மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கப் போவதாக முதலமைச்சரான பிறகு விஜய் முடிவெடுத்தாலோ காங்கிரஸ் என்ன செய்யும்?" என்கிறார் அவர்.

"கொள்கைகள் குறித்து தவெக - காங்கிரஸ் தரப்பினர் என்ன விவாதித்தனர்? தொகுதி மறுவரையறை, மொழி கொள்கை, மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக இரு தரப்பினரும் என்ன பேசினர்? இம்மாதிரியான அவசர சூழலில் இதுகுறித்து பேசியிருக்க முடியுமா என்பதில் கேள்விகள் உள்ளன. இது வெறும் எண்கள் ரீதியிலான விளையாட்டாகவே உள்ளது." என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியை ஆனந்தி.

"தன்னுடைய கொள்கை எதிரி பாஜக என்பதை விஜய் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார். எங்களின் ஆதரவுக்கான நிபந்தனையாக வகுப்புவாத சக்திகள் கூட்டணிக்குள் வரக்கூடாது என கூறியுள்ளோம். அதற்கு அர்த்தம் பாஜக உள்ளே வரக்கூடாது என்பதுதான்" என்கிறார் மோகன் குமாரமங்கலம்.

விஜய்

பட மூலாதாரம், TVKHQ/X

'இந்தியா' கூட்டணி என்னவாகும்?

தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க அமைக்கப்பட்டுள்ள 'இந்தியா' கூட்டணி இனி என்னவாகும்?

"இந்தியா கூட்டணிக்கு விஜய் போகலாம். அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் தனித்தனியே களம் கண்டாலும் தேசியளவில் பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் ஒன்றாக இருக்கின்றனர். ஆனாலும், இப்போது, தவெக 'இந்தியா' கூட்டணிக்குள் வந்தால் திமுக இருக்குமா என கேள்விகள் எழலாம். அடுத்த மக்களவை தேர்தலுக்குள் இது சரிசெய்யப்படலாம்." என்கிறார் மாலன்.

"திமுகவின் கொள்கை பாஜகவுக்கு எதிரானது. அப்படியிருக்கையில் 'இந்தியா' கூட்டணியுடன் ஏன் வரமாட்டார்கள்? இரு கட்சிகளும் (தவெக - திமுக) சேர்ந்துதானே பாஜகவை எதிர்க்க வேண்டும். எல்லா கொள்கைகள் கொண்ட கட்சிகளும் 'இந்தியா' கூட்டணியில் உள்ளன. இந்தியா கூட்டணியில் வராமல் பாஜகவுடன் கூட்டணிக்கு திமுக செல்லுமா? இருவரும் 'இந்தியா' கூட்டணியில் இருக்கலாம். எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்." என்றார் மோகன் குமாரமங்கலம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு