பொது கழிப்பறைகள் உள்ளே இருப்பவரின் கால் வெளியே தெரியும் வகையில் கட்டப்படுவது ஏன்?

பொது கழிப்பறை, கதவுக்கு கீழே இடைவெளி ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கதவுக்கு மேலும் கீழும் உள்ள இடம், சிறந்த காற்றோட்டத்துக்கு வழிவகுக்கிறது.
    • எழுதியவர், பரா பதாயா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"இது இப்போது உருவான புதிய யோசனை அல்ல. இது அமெரிக்காவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அங்கிருந்து பல நாடுகள் இதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன"

கழிப்பறைகள் ஏன் கால்கள் தெரியும் வகையில் கட்டப்படுகின்றன என்ற கேள்விக்கு கட்டடக் கலைஞர் கிரண்மயி அளித்த பதில் இது.

"போதுமான காற்றோட்டம் கிடைக்கிறது, சுத்தம் செய்வது எளிது மற்றும் செலவும் குறைவு. தரை உலர்ந்த நிலையிலேயே இருக்கும். இவைதான் இதன் சாதகமான அம்சங்கள்" என்று ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள பல அலுவலகங்களில் தூய்மைப் பணிகளை நிர்வகிக்கும் நாகேஸ்வர ராவ் கூறினார்.

விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், கார்பரேட் அலுவலகங்கள், மைதானங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்களில், கழிப்பறை கதவுகளுக்கும் தரைக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி உருவாக்கப்படுகிறது.

இந்தக் கழிப்பறைகளில் மூன்று பக்கங்களிலும் இடைவெளிகள் உள்ளன. கதவுக்கு மேலும் கீழும் கூட இடைவெளி விடப்பட்டுள்ளது.

இந்த அறைகளில் மேலைநாட்டு கழிப்பறைகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இவை குறைந்த அளவிலான தண்ணீரையே பயன்படுத்துகின்றன.

கழிப்பறை கதவுக்கு மேலும் கீழும் சில அங்குலங்கள் இடைவெளி விடுவதால் பல நன்மைகள் இருப்பதாக கட்டடக் கலைஞர் கிரண்மயி கூறுகிறார்.

கட்டுமானத் துறையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் கணேஷ் கூறுகையில், அவசர காலங்கள், பராமரிப்பு, தூய்மை மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த வடிவமைப்பு வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பொது கழிப்பறை, கதவுக்கு கீழே இடைவெளி ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவில், பொதுக் கழிப்பறைகள் அனைத்துப் பாலினக் கழிப்பறைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. அதாவது, பாலினப் பாகுபாடின்றி ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவற்றைப் பயன்படுத்தலாம்.

இந்த யோசனை எப்படி உருவானது ?

பொதுக் கழிப்பறை வடிவமைப்புகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வருகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடத் தடுப்புகள் நவீனமயமாகி வருகின்றன.

இருப்பினும், கட்டடக் கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சிறந்த வசதிகளை உருவாக்குவதன் ஒரு பகுதியாகவே சிலர் இந்த வடிவமைப்பை இறுதி செய்துள்ளதாக, ஆமதாபாத் சிஇபி பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை விரிவுரையாளராகப் பணிபுரியும் மேக்னா கன்னேகண்டி தெரிவித்தார்.

நியூயார்க்கின் பஃபலோவில் உள்ள புகழ்பெற்ற லார்கின் நிர்வாகக் கட்டடத்திற்காக , 1903 மற்றும் 1950-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் ஃபிராங்க் லாயிட் ரைட் இந்த வடிவமைப்பைப் பயன்படுத்தினார்.

அவரது பல வழிமுறைகளில் ஒன்றாக, பிற்கால வணிகக் கட்டடங்களில் இத்தகைய கழிப்பறை கதவுகள் ஒரு பொதுவான தரநிலையாக மாறியதாக ஃபிராங்க் லாயிட் ரைட் அறக்கட்டளையின் இணையதளம் குறிப்பிடுகிறது.

பொது கழிப்பறை, கதவுக்கு கீழே இடைவெளி ஏன்?

பட மூலாதாரம், Robert Altman/Michael Ochs Archives/Getty Images

படக்குறிப்பு, பொதுக் கழிப்பறை வடிவமைப்புகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வருகின்றன.

அமெரிக்காவில் இயற்றப்பட்ட சட்டம்

தற்போதைய வடிவமைப்பானது கழிப்பறைகளைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவை வெகுவாகக் குறைத்துள்ளது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் உருவாக்கப்பட்ட இந்த வடிவமைப்பு, இன்று உலகின் பல நாடுகளில் பொதுக் கழிப்பறைகளுக்கான ஒரு தரநிலையாக மாறியுள்ளது.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களுக்கான கழிப்பறைகளை உருவாக்குவதற்காக, அமெரிக்க அரசாங்கம் 'அமெரிக்க மாற்றுத் திறனாளிகள் சட்டம்' (Americans with Disabilities Act - ADA) என்ற சட்டத்தை உருவாக்கியது.

கழிப்பறை தடுப்புப் பலகைகள் மற்றும் கதவுகளுக்கு அடியில் இடைவெளி இருக்க வேண்டும் என்று அந்தச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

குழந்தைகள் அமர்வதற்கு வசதியாக கழிப்பறை இருக்கைகள் இருக்க வேண்டும் என்றும் அந்தச் சட்டம் குறிப்பிடுகிறது .

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் இத்தகைய கழிப்பறைகள் சில குறிப்பிட்ட நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கட்டுமான நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொது கழிப்பறை, கதவுக்கு கீழே இடைவெளி ஏன்?

பட மூலாதாரம், Meghana Kanneganti

படக்குறிப்பு, கட்டுமானத் துறையில் செலவுகளைக் குறைப்பதோடு, வசதியையும் சௌகரியத்தையும் வழங்கும் புதிய வடிவமைப்புகள் உருவாகி வருவதாக மேகனா கன்னேகண்டி கூறினார்.

அவசரநிலை, பாதுகாப்பு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பொதுக் கழிப்பறைகள் பொதுவாக மூன்று அடி அகலமும், ஐந்து அடி அல்லது அதற்குக் குறைவான நீளமும் கொண்டவை. இவ்வளவு சிறிய பகுதி காற்று மற்றும் வெளிச்சம் புகாதவாறு முற்றிலும் மூடப்பட்டிருந்தால், பல சிக்கல்கள் எழும்.

திடீரென மின்சாரம் தடைபட்டால், உள்ளே இருப்பவர்கள் பீதியடையக் கூடும். இடம் சிறியதாக இருந்தால், சிலருக்கு பதற்றமும் பயமும் ஏற்படக் கூடும் என்கிறார் மேக்னா.

பொது இடங்களில் முற்றிலும் மூடப்பட்ட கழிப்பறைகளில், சுவர்களில் கிறுக்குவது, படங்கள் வரைவது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடந்த சம்பவங்கள் உண்டு.

முன்பெல்லாம், கழிப்பறையின் நான்கு பக்கங்களும் மூடப்பட்டிருக்கும். இவற்றின் உட்புறம் பெரும்பாலும் ஈரப்பதமாகவும் துர்நாற்றத்துடனும் காணப்படும்.

இவற்றுள் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் இருந்து நீர் கசிவது துர்நாற்றத்தையும் விபத்துகளையும் ஏற்படுத்தக்கூடும்.

அதுமட்டுமின்றி, தரைக்கும் கதவுக்கும் இடையே உள்ள இடைவெளி, உள்ளே ஏதேனும் அவசர நிலை அல்லது மருத்துவ அவசர நிலை ஏற்பட்டால் உடனடி உதவி கிடைக்க வழிவகுக்கிறது.

கதவின் பூட்டு பழுதாகிவிட்டால், நீங்கள் கவலைப்படாமல் உடனடியாக உதவி கேட்கலாம். கதவுகள் முழுமையாக மூடப்பட்ட கழிப்பறைகளில் இது சாத்தியமில்லை.

பொது கழிப்பறை, கதவுக்கு கீழே இடைவெளி ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இத்தகைய கழிப்பறைகளைக் கட்டுவதற்குச் செலவு குறைவு என்றும், அவற்றை விரைவாகக் கட்டி முடிக்க முடியும் என்றும் கட்டடக்கலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

செலவு குறைவு, பராமரிப்பதும் எளிது

இந்தக் கழிப்பறைகளை ஒரு கட்டடத் தளத்தின் எந்த இடத்திலும் நிறுவ முடியும்.

இவற்றைக் கட்டுவதற்குச் செலவு குறைவு. அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுவதும் எளிது. சேதமடைந்தாலும் அவற்றை விரைவாக மாற்ற முடியும்.

வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். அவர்களில் பலர் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அடிக்கடி சுத்தம் செய்வதற்கும், அவற்றை உலர்ந்ததாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதற்கும் இந்த வடிவமைப்பு ஏற்றது. இதனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்திய பிறகும் துர்நாற்றம் ஏற்படாது.

முற்றிலும் மூடப்பட்ட கழிப்பறைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பிற வைரஸ்கள் இருக்கும். இவை துர்நாற்றத்தையும் சுகாதாரப் பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடும். கழிப்பறைகளை அனைத்துப் பக்கங்களிலும் மூடுவது உட்புறத்தில் ஈரப்பதம் அதிகரிக்கக் காரணமாகிறது. இந்தச் சூழல் காலப்போக்கில் அந்தத் தடுப்புப் பலகைகளைச் சேதப்படுத்தக் கூடும்.

இருப்பினும், இத்தகைய கழிவறைகளில் கதவுக்குக் கீழ் இடைவெளி இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்தப் பிரச்னைகள் மிகக் குறைவாகவே இருக்கும்.

முற்றிலும் மூடப்பட்ட கழிப்பறைகளில் ஈ-கோலை எனப்படும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற வைரஸ்கள் இருக்கும். இவை துர்நாற்றத்தையும் சுகாதாரப் பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இவை அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காற்றும் ஒளியும் தாராளமாக கிடைக்கும்

பொதுக் கழிப்பறைகளை அதிகமான மக்கள் பயன்படுத்துவதால் அடிக்கடி அந்த இடங்கள் ஈரமாகின்றன. சரியான காற்றோட்டம் இல்லையெனில், அங்கிருந்து துர்நாற்றம் வீசக்கூடும்.

இந்த அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கதவுகளுக்கு அடியில் உள்ள இடைவெளி வழியாகச் செல்லும் காற்று, அவை விரைவாக உலர உதவி செய்து, துர்நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இத்தகைய தடுப்பு அமைப்பானது, கட்டடத்தில் தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் அதனை விரைவாகக் அறிய வழிவகை செய்கிறது.

எந்தக் கழிப்பறை காலியாக உள்ளது என்பதை எளிதாகப் பார்க்க முடியும்.

கதவுக்கும் தரைக்கும் இடையே உள்ள இடைவெளியானது, தூய்மைப் பணியாளர்கள் கதவைத் திறக்காமலேயே தரையைச் சுத்தம் செய்ய அனுமதிக்கிறது.

தரையைத் தொடும் கதவுகளைக் கொண்ட கழிப்பறைகளை விட, இந்த வடிவமைப்பைக் கொண்ட கழிப்பறைகளைக் கட்டுவது பொருளாதார ரீதியாகவும் எளிதானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு