தாராபுரம் நாதக வேட்பாளர் கைது ஏன்? இடைத்தேர்தலின் போது பதிவான வழக்குகளின் பின்னணி

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு - பின்னணி என்ன?
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
    • எழுதியவர், பா.சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா இன்று திடீரென காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தல் சமயத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம் என்றும் தெரிவித்தார். நாதக மட்டுமல்லாத பிற கட்சிகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது என்ன நடந்தது?

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியின் பணிமனை முன்பு அக்கட்சியினர் பதாகை வைத்துள்ளனர்.

அந்தப் பதாகையை அகற்றுமாறு காவல்துறையினர் கூறிய போது நாம் தமிழர் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கட்சி நிர்வாகிகள் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர் காவல்நிலையத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் காவல்துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாதக நிர்வாகிகளை காவல்துறையினர் விடுவித்தனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நாதக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 4-ஆம் தேதி தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது முதல்வரின் பரப்புரையைக் காரணம் காட்டி தங்களின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அன்று மாலை விடுவித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு - பின்னணி என்ன?
படக்குறிப்பு, தாராபுரம் காவல் நிலையத்துக்கு வெளியே கார்த்திகா செய்தியாளர்களிடம் பேசினார்.

இன்று என்ன நடந்தது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கோவையில் கார்த்திகாவின் வீட்டில் அவரையும், அவரது கணவரையும் கைது செய்த தாராபுரம் காவல்துறையினர் மேலும் சில நாதக நிர்வாகிகளையும் கைது செய்தனர். அவர்கள் தாராபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காவல்நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, "எதற்கு கைது செய்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காலை 5:30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த போது கைது செய்துள்ளார்கள்." என்று தெரிவித்தார்.

தகவலறிந்த நாம் தமிழர் கட்சியினர் தாராபுரம் காவல்நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து சீமான் தலைமையில் விரைவில் கண்டன அறப்போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணிப் பிரிவு பொறுப்பாளர் நன்மாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"வழக்கறிஞர்களையோ அல்லது குடும்பத்தினரையோ சந்திக்க விடாமல் தடுக்கும் நோக்கில் கைது செய்யப்பட்டவர்களை ஒரே இடத்தில் வைக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, "கைது செய்ததற்கான காரணத்தைக் கூறவில்லை. இரவு உடையில் இருந்த நிலையிலே அழைத்து வந்துள்ளார்கள். நான் என்ன குற்றம் செய்தேன்? இறுதிநாள் பரப்புரையில் ஆளுங்கட்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அந்த இடத்தில் இல்லாத தேர்தலுக்கு தொடர்பே இல்லாத எங்கள் கட்சியினரைக் கைது செய்துள்ளனர்." என்றார்.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு - பின்னணி என்ன?
படக்குறிப்பு, காவல்துறை கைது செய்ததற்கான காரணத்தைக் கூறவில்லை என்கிறார் கார்த்திகா

நாதக கூறுவது என்ன?

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்."

"தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா?" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு - பின்னணி என்ன?

எதிர்க்கட்சிகள் கண்டனம்

கார்த்திகாவையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்." என்று எக்ஸ் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திகாவை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக கூறியுள்ளது.

"ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய "Narcissistic Behaviour"- அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது ஜோசப் விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு. கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும்" என்று அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் மீதான தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்." என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உடை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்காமல் இரவு உடையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவது, பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொள்ளாத செயலாகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

"மாற்றம், மாற்றம்" என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ள கைது நடவடிக்கைகளையே தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம்? பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைந்துள்ளன." என்றார்.

தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தவெக பதில்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் சத்திய குமார்.
படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் சத்ய குமார்.

இந்த நிலையில் கைது நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாகவே எடுக்கப்படுவதாகக் கூறுகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் சத்ய குமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கட்சி தலையீடு இல்லை. எந்தக் காழ்ப்புணர்ச்சியும் அரசியல் பழிவாங்கும் எண்ணமும் இல்லை. தவெக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி எந்த நிவாரணம் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்." என்று தெரிவித்தார்.

காவல்துறை விளக்கம்

இது தொடர்பாக தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது, காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுப்பது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களை இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறோம். அவர்களை நீதிமன்ற காவலில் வைப்பதா இல்லை விடுவிப்பதா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு