கிம் ஜாங் உன் வாரிசு தயாரா? இளம் வயது மகளின் ஆடை, சிகையலங்காரம் உணர்த்தும் விஷயங்கள்

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், சங்மி ஹான்
- பதவி, பிபிசி நியூஸ் கொரியன்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
2022 நவம்பரில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நேர்த்தியாக உடையணிந்த சிறுமியுடன் அருகில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.
தனது தந்தையுடன் இணைந்து ஒரு பிரமாண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு முன்னால் நடந்து சென்ற அவர், கறுப்பு நிற கால்சட்டை மற்றும் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். அவரது நீண்ட தலைமுடி பின்னால் கட்டப்பட்டிருந்தது.
அரசு பிரசார ஊடகங்களில் அச்சிறுமி அறிமுகமான அந்த நேரத்தில் அவருக்கு ஒன்பது வயது எனக் கூறப்படுகிறது.
அப்போதே ஜூ ஏ ஈர்க்கக்கூடிய வகையில் உடையணிந்திருந்தார்.
அதன் பிறகு அவரது சிகை அலங்காரங்களும், அவரது உடைகளும் நேர்த்தியாகவும், அதிநவீனமாகவும் மாறியுள்ளன.
இவ்வளவு இளம் வயதிலேயே அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கிம் ஜாங் உன் அவரைத் தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் நம்புகிறது.
தற்போது 13 வயதுடையவர் என நம்பப்படும் ஜூ ஏ, ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில் தனது தந்தைக்கு அருகில் நிற்பது மற்றும் அவருடன் வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது என பல புகைப்படங்களில் காணப்படுகிறார்.
ஆனால் தோல் உடைகள், மென் உரோம ஆடைகள் மற்றும் "சேவல் கொண்டை" சிகை அலங்காரம் போன்ற அவரது பாணிகள், அவர் நாட்டை வழிநடத்த தயார் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
ஜூ ஏ-வின் ஆடைகள் பெரும்பாலும் அரசாங்கத்தின் பிரசார துறையாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
சில சமயங்களில், அவர் தனது தாயார் ரி சொல் ஜூவைப் போலவே முறையான உடைகள் மற்றும் பாவாடைகளில் காணப்படுகிறார்.
"ஜூ ஏ இன்னும் சிறுமியாக இருப்பதால், அவரது வயது எதிர்காலத் தலைவருக்கு ஒரு பலவீனமாகக் கருதப்படலாம். எனவே அவரது இளமையைத் மறைத்து, மிகவும் முதிர்ச்சியான பிம்பத்தை வெளிப்படுத்துவதற்காகவே, அவரது தாயார் அணிவதைப் போன்ற முறையான உடைகளை அவருக்கு அந்த நிர்வாகம் அணிவிப்பதாகத் தோன்றுகிறது" என்று செஜோங் இன்ஸ்டிடியூட் துணை இயக்குநர் சியோங் சியோங்-சாங் பிபிசி கொரியாவிடம் கூறுகிறார்.
வேறு சில சமயங்களில், ராணுவத் தளங்கள் போன்ற "ஓரளவு கரடுமுரடான இடங்களுக்கு" செல்வதற்கு ஏற்றவாறு, "தோற்றத்தில் வலிமையானதாகவும் அதே சமயம் சாதாரணமாகவும்" தோல் ஜாக்கெட் போன்ற ஆடைகளை அவர் அணிந்துள்ளார் என்று சியோங் குறிப்பிட்டார்.
இருப்பினும், இது அவர் தனது தந்தையுடன் ஒரே மாதிரியான உடையணிவதைக் குறிக்கிறது.
அதிபர் கிம் ஜாங் உன்னும் கறுப்பு நிற தோல் ஜாக்கெட் மற்றும் ட்ரெஞ்ச் கோட்டுகளை விரும்பி அணிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Reuters
"பிம்ப நகலாக்கம்" என்று அழைக்கப்படும் முந்தைய தலைமுறையினரின் ஆடை அலங்காரங்களை அப்படியே பின்பற்றுவது என்பது, வடகொரியத் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு தந்திரமாகும்.
கிம் ஜாங் உன் தலைவராக பதவி ஏற்ற தொடக்க காலங்களில், தனது தாத்தா கிம் இல் சுங்கைப் போல ஆடைகளை அணிவதன் மூலம் தனது அங்கீகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றார்.
நிபுணர்களின் கருத்துப்படி, வடகொரியாவை நிறுவி 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்திய கிம் இல் சுங், அந்த நாட்டில் ஒரு கடவுளாகவே பார்க்கப்படுகிறார்.
"கிம் இல் சுங் மீது மக்கள் வைத்திருந்த மரியாதையை இயல்பாகவே கிம் ஜாங் உன்னிற்கு மாற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில், பிரசார மற்றும் கிளர்ச்சித் துறை (The Propaganda and Agitation Department) மிக முக்கியமான பங்கை வகித்தது" என்று சியோங் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "கிம் ஜாங் உன் முதன்முதலில் தோன்றியபோது வடகொரிய மக்கள் ஆச்சரியப்பட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது, இளம் வயது கிம் இல் சுங்கை அப்படியே உரித்து வைத்தது போல் இருந்தது தான் தென்கொரிய நிபுணர்களும் ஆச்சரியப்பட்டதற்குக் காரணம்."
"வாரிசு என்ற முறையில் இளம் கிம் ஜாங் உன் சந்தித்த அனுபவமின்மை மற்றும் வயதுக் குறைவு போன்ற குறைபாடுகளை, அவர் கிம் இல் சுங்கை போல் இருந்தார் என்ற ஒரே உண்மையால் ஈடுகட்ட முடிந்தது", "கிம் இல் சுங்கே மீண்டும் மறுபிறவி எடுத்து வந்துவிட்டதாக வடகொரிய மக்களிடையே வதந்திகள் பரவும் அளவிற்கு அந்தத் தோற்றம் அமைந்திருந்தது"என்றும் சியோங் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஜூ ஏ-வின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதைத் தாண்டி, "மேற்கத்திய பாணியிலான ஆடைகளை அணிவதன் மூலம், ஜூ ஏ மற்றும் ரி சொல் ஜூ ஆகியோர் ஒரு 'வேறுபடுத்தும் உத்தியை' வெளிப்படுத்துகிறார்கள். அதாவது அவர்களின் சமூக அந்தஸ்து சாதாரண குடிமக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை இது காட்டுகிறது" என்று சியோங் தெரிவித்தார்.
ஜூ ஏ பல சந்தர்ப்பங்களில் தோல் ஜாக்கெட்டுகளை அணிந்திருப்பது, பிரசார மற்றும் கிளர்ச்சித் துறை அவரது நிலையை பொது மக்களுக்கு மேலாக நிலைநிறுத்துவதில் ஆர்வமாக இருப்பதை உணர்த்துகிறது.
"உயர்தர தோலினால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவது ஒருவரது சிறப்பு அந்தஸ்தைப் பறைசாற்றும் வழியாகும்" என்கிறார் சியோங்.
"வடகொரிய மக்களிடையே தோல் ஆடைகள் அவ்வளவு பொதுவானவை அல்ல. ஆடம்பர பிராண்டுகள், தோல் ஜாக்கெட்டுகள் மற்றும் உரோம கோட்டுகள் போன்றவை சாதாரண வடகொரியர்களால் அணிய முடியாத விலைமதிப்பு மிக்க ஆடைகள் ஆகும்"என்றும் சியாங் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
மற்ற மக்கள் மீது கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டு வரும் சூழலுக்கு நேர்மாறாக, ஜூ ஏ-வின் மாறிவரும் ஆடை அலங்காரங்கள் அமைந்துள்ளன.
2020-ஆம் ஆண்டில், வடகொரியா "வெளிநாட்டு கலாசாரத்தை" தடுப்பதற்காக 'பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாசார நிராகரிப்புச் சட்டத்தை' இயற்றியது.
ஆனால் 2023-இல், அரசு நடத்தும் கொரிய மத்திய செய்தி நிறுவனம், ஜூ ஏ மீண்டும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு முன்னால் தனது தந்தையுடன் நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டது.
இந்த முறை அவர் அணிந்திருந்த கறுப்பு நிற பேடட் ஜாக்கெட், பிரான்ஸின் ஆடம்பர ஃபேஷன் நிறுவனமான கிறிஸ்டியன் டியோரிடமிருந்து 1,900 டாலர் (1,405பவுண்டு ) வாங்கப்பட்டது என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
அடுத்த ஆண்டு, தலைநகர் பியோங்யாங்கில் ஒரு குடியிருப்புப் பகுதியின் நிறைவு விழாவிற்கு, ஜூ ஏ தனது கைகள் தெரியும் வகையிலான மேலாடையை அணிந்து வந்திருந்தார்.
அதன் பிறகு, பொது குடிமக்களுக்கான ஒரு வழிகாட்டுதலாக வீடியோ விரிவுரை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், இதுபோன்ற சிகை அலங்காரங்கள் மற்றும் ஆடைகளை மக்கள் அணியக்கூடாது என்றும், அவை "சோசலிச அமைப்பின் பிம்பத்தை மழுங்கடித்து, ஆட்சி அதிகாரத்தை சிதைக்கும் சோசலிச எதிர்ப்பு மற்றும் சோசலிசமற்ற நிகழ்வுகளும் ஆகும், இவை ஒழிக்கப்பட வேண்டிய இலக்குகள்" என்றும் எச்சரிக்கப்பட்டதாக உள்ளூர் ஆதாரம் ஒன்று ரேடியோ ஃப்ரீ ஆசியாவிடம் தெரிவித்தது.

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், News1
ஏறக்குறைய கடவுள் போல கருதப்படும் கிம் குடும்பத்தினர், சமூகத்தின் பிற பகுதிகளுக்குப் பொருந்தும் விதிகளிலிருந்து எவ்வாறு விலக்குப் பெறுகிறார்கள் என்பதை இந்தச் சம்பவங்கள் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.
"மேற்கத்திய ஆடை என்பதால் வடகொரியாவில் ஜீன்ஸ் தடை செய்யப்பட்டிருந்தாலும், கிம் ஜாங் உன் அவற்றை அணிந்து தோன்றியுள்ளார்" என்று கூறிய வடகொரிய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லீ வூ-யங், "அவர்கள் வெளிநாட்டு கலாசாரத்தை எவ்வளவுதான் தடை செய்தாலும், சட்டங்களை இயற்றினாலும், வடகொரியாவில் அதன் உயர் மட்ட தலைவரால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை"என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், சில வடகொரியர்கள் கிம் குடும்பத்தைப் பின்பற்ற விரும்புவதையும், ஜூ ஏ-வைப் போலவே அதிநவீனமாக உடையணிய விரும்புவதையும் இது தடுத்து நிறுத்தவில்லை.
செல்வந்தர்களான வடகொரியர்களிடையே அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், சீனாவுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் ரோமக் கோட்டுகள்(ஃபர்) பிரபலமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு புகழ்பெற்ற மழலையர் பள்ளியில், குழந்தைகள் சற்றே வெளிப்படையான மேலாடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஜூ ஏ மற்றும் கிம் ஜாங் உன் அணிவதைப் போன்ற சன்கிளாஸ்கள் மற்றும் தோல் ட்ரெஞ்ச் கோட்டுகள் வசதி படைத்த இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
இது வடகொரியாவில் வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல.
கடந்த காலங்களில் இளைஞர்கள் கிம் ஜாங் உன்னின் சிகை அலங்காரத்தைப் பின்பற்றியதாகத் தகவல்கள் உள்ளன.
சாதாரண வடகொரியர்களுக்கு ஃபேஷன் ட்ரெண்டுகள் உள்ளிட்ட வெளி உலகத் தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
இது அந்த நாட்டின் தலைவரை ஒரு எதிர்பாராத 'ஃபேஷன் அடையாளமாக' மாற்றுகிறது.
இப்போது, அவரது மகளும் ஒரு ஃபேஷன் அடையாளமாக மாறியுள்ளதாகத் தெரிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































