அபுதாபி: அணுமின் நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

2026 மார்ச் 3 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா தொழிற்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, புகை மண்டலம் எழும் காட்சி

பட மூலாதாரம், adel SENNA/AFP via Getty Images

படக்குறிப்பு, 2026 மார்ச் 3 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா தொழிற்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, புகை மண்டலம் எழும் காட்சி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை இந்தியா கண்டித்துள்ளது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை பதற்றத்தை அதிகரிக்கவே செய்கின்றன. உடனடியாக சுய கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான வழிமுறைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்று கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அமைந்துள்ள பரக்கா அணுமின் நிலையம் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக, அபுதாபியின் அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்கிற விவரத்தை ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை வெளியிடவில்லை.

அல் தஃப்ரா பிராந்தியத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையத்தில், தாக்குதல் காரணமாக ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் எல்லைக்கு வெளியே அமைந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க அபுதாபி அதிகாரிகள் உடனடியாகப் செயலாற்றினர்," என்று அரசாங்க ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

"டிரோன் தாக்குதலால் இந்தத் தீ ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை; கதிரியக்கப் பாதுகாப்பு நிலைகளும் பாதிக்கப்படவில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன."

இத்தாக்குதலால் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையோ அல்லது அதன் முக்கிய அமைப்புகளின் தயார் நிலையையோ பாதிக்கவில்லை என்றும், அனைத்து அலகுகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதி

சௌதி, சர்வதேச அணுசக்தி முகமை கவலை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிபிசி நியூஸ் பாரசீக சேவையின்படி, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

அதன் தலைமை இயக்குநர் ரஃபேல் குரோசி, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீதுடன் தொலைபேசியில் பேசுகையில், அந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது எதிரித் தாக்குதலுக்கும் பதிலடி கொடுப்பதற்கான தனது 'ராஜீய மற்றும் ராணுவ உரிமைகளை' அது தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தஃப்ரா பிராந்தியத்தில் அமைந்துள்ள பரக்கா அணுமின் நிலையம், ஐக்கிய அரபு அமீரகத்தின் மேற்கு எல்லையிலிருந்து நுழைந்த ஒரு டிரோனால் குறிவைக்கப்பட்டதாக, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறியுள்ளதுடன், இது தனது பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என்றும், சர்வதேச சட்டத்தின் மீதான தெளிவான மீறல் என்றும் குறிப்பிட்டது.

அபுதாபியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர் (கோப்புப்படம்).

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, அபுதாபியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்துக்கு அருகே டிரோன் தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் (கோப்புப்படம்).

சமீபத்தில் இரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரின்போது, ​​இரான் தனது பொதுமக்களுக்கான கட்டமைப்புகள் மீது 3,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதற்கிடையில், இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில், ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்கு வகித்ததாக, இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய ராணுவத் தளங்களையும் நிறுவனங்களையும் மட்டுமே இதுவரை தாக்கியுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அணுமின் நிலையத்தின் மீதான டிரோன் தாக்குதலை சௌதி அரேபியாவும் கண்டித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான டிரோன் தாக்குதலை "கடுமையாகக் கண்டிப்பதாக" சௌதி அரேபியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், இந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய ஒரு "பயங்கரவாதச் செயல்" என்று விவரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு