கியூபாவின் ராவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குறி - வெனிசுவேலாவின் மதுரோ பாணி நடவடிக்கைக்கு திட்டமா?

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1964 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சே குவேராவுடன் ராவுல் காஸ்ட்ரோ
    • எழுதியவர், அடஹுவல்ப அமெரிஸ்
    • பதவி, ஆசிரியர், பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

ராவுல் காஸ்ட்ரோ மீதான குற்றச்சாட்டின் மூலம், கடந்த தசாப்தங்களில் கியூபா அரசாங்கத்தின் மிக முக்கியமான நபராக விளங்கியவரை அமெரிக்கா தனது இலக்காக மாற்றியுள்ளது.

புரட்சிப் போராட்ட வீரராக இருந்தவர், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் ஆயுதப் படைகளின் அமைச்சராகப் பணியாற்றிய ராவுல் காஸ்ட்ரோ, தனது சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசியல் வாரிசாகப் பொறுப்பேற்றவர் என்பதுடன் கம்யூனிச ஆட்சியின் மிகப்பெரிய சீர்திருத்தங்களை செயல்படுத்தியவர் என பல முகங்களைக் கொண்ட ராவுல் காஸ்ட்ரோ தனது 94 வயதில் தற்போது அண்டை நாடான அமெரிக்காவில் சட்டப் போராட்டத்தை எதிர்கொள்கிறார்; கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த போராட்டத்தின் பின்னணி மிகவும் பழமையானது.

1996 பிப்ரவரி 24 அன்று, கியூபாவில் இருந்து வெளியேறியவர்களின் அமைப்பான 'ஹெர்மனோஸ் அல் ரெஸ்கடே' என்ற அமைப்பின் இரண்டு சிறிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. நான்கு பேர் பலியான இந்த சம்பவம், கியூபா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றை ஏற்படுத்தியது.

ராவுல் காஸ்ட்ரோ மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள், அமெரிக்க குடிமக்களைக் கொல்வதற்கான சதி, விமானங்கள் மீதான தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் புதன்கிழமை மயாமியில் அறிவித்தார்.

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1996 ஆம் ஆண்டில் விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் 'ஹெர்மனோஸ் அல் ரெஸ்கடே'அமைப்பின் சிறிய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியபோது, ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் ஆயுதப் படைகளின் தலைமை பொறுப்பில் இருந்தார்

முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமை

கடந்த ஜனவரி மாதம் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு பார்த்தால், கியூபாவின் சமகால வரலாற்றில் ராணுவ ஜெனரல் ராவுல் காஸ்ட்ரோ வகித்த முக்கியப் பங்கு காரணமாகவும் இந்த வழக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

எப்போதும் தனது சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நிழலிலேயே இருந்த போதிலும், கியூபா அரசாங்கத்தின் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் மிக முக்கியமான நபராக அவர் விளங்கினார். பின்னர் 2008 இல் அதிகாரப்பூர்வமாகப் ஆட்சியைப் பொறுப்பேற்று, ஒரு தசாப்த காலம் நாட்டை வழிநடத்தினார்.

2018-ஆம் ஆண்டில் அதிபர் பதவியை ஒப்படைத்திருந்த காஸ்ட்ரோ, அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் மிகேல் தியாஸ்-கானெலிடம் ஒப்படைத்தார். இருந்தபோதிலும், கியூபாவின் அதிகார அமைப்பில் அவரே இன்னும் மிகவும் சக்திவாய்ந்த மனிதராக இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அவர் மீதான இந்தச் சாத்தியமான சட்ட நடவடிக்கை, கடந்த பல தசாப்தங்களில் தீவு நாடான கியூபா சந்தித்திராத ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வந்துள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்தின் கடுமையான அழுத்தம் காரணமாக கியூபா தற்போது மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை என தீவிரமான பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

மறுபுறம், கியூபாவின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையை விவாதிப்பதற்காக அமெரிக்க அதிகாரிகளும், ராவுல் காஸ்ட்ரோவுக்கு நெருக்கமான கியூபா அதிகாரிகளும் ஹவானாவில் ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

94 வயதான இந்த தலைவர், தனது சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவை விட மாறுபட்டவர். பாரம்பரியமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தவர் ராவுல் காஸ்ட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

பாடிஸ்டா ஆட்சியை வீழ்த்திய கொரில்லா போராட்டத்தின் போது சந்தித்த முக்கிய புரட்சியாளரான வில்மா எஸ்பினை ராவுல் காஸ்ட்ரோ திருமணம் செய்து கொண்டார். வில்மா எஸ்பின் 2007 இல் புற்றுநோயால் காலமானார்.

ராவுல் காஸ்ட்ரோ - வில்மா எஸ்பின் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களில், தேசிய மக்கள் சக்தி அவையின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய பாலியல் கல்வி மையத்தின் இயக்குநருமான மாரியலா காஸ்ட்ரோ எஸ்பின் மற்றும் அரசு பாதுகாப்பு அமைப்பின் உளவு மற்றும் முறியடிப்புப் பிரிவின் இயக்குநரான அலெஹான்ட்ரோ காஸ்ட்ரோ எஸ்பின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1998-ஆம் ஆண்டில் வில்மா எஸ்பின் மற்றும் ராவுல் காஸ்ட்ரோ

ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா ஆகியோரின் பரவலான புரட்சிகர பிம்பங்களுக்கு நேர்மாறாக, ராவுல் காஸ்ட்ரோ தன்னைச் சுற்றி மாபெரும் தனிநபர் வழிபாட்டு முறையை உருவாக்கிக் கொள்ளாமல், எளிமையான, யதார்த்தமான மற்றும் ராணுவ ரீதியிலான பாங்கான ஒரு பிம்பத்தையே வெளிப்படுத்தினார்.

இருந்தபோதிலும், கியூபாவின் அரசு அலுவலகங்களின் சுவர்களில் பெரும்பாலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் படத்திற்கு அருகிலேயே ராவுல் காஸ்ட்ரோவின் புகைப்படமும் இருப்பதை காண்பது இயல்பானது.

ராவுல் காஸ்ட்ரோ யார் என்பதையும், கியூபாவின் வரலாற்றிலும் தற்போதைய சூழலிலும் அவருடைய மிக முக்கியமான பங்களிப்பு என்ன என்பதையும் விரிவாக ஆராய்வோம்.

சீர்திருத்தங்கள் மேற்கொண்ட அதிபர் (2008-2018)

ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் எர்னஸ்டோ "சே" குவேரா ஆகியோருடன் இணைந்து மிக இளம் வயதிலிருந்தே புரட்சிகரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராவுல் காஸ்ட்ரோ, பல தசாப்தங்களாக கியூப ராணுவ அமைப்பில் முக்கியப் பங்கு வகித்தவர். 2006 மற்றும் 2008-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிகாரத்திற்கு வந்த பிறகே ராவுல் காஸ்ட்ரோ மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைவராக உருவெடுத்தார்.

தனது சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோ கடுமையான நோய்க்கு ஆளானதைத் தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டில் தற்காலிக அதிபராக பொறுப்பேற்ற ராவுல் காஸ்ட்ரோ, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவின் அதிகாரப்பூர்வ அதிபராக நியமிக்கப்பட்டார்.

ஃபிடல் காஸ்ட்ரோவின் வசீகரிக்கும் மற்றும் சித்தாந்த பாணிக்கு மாறாக, அவரது தம்பி ராவுல், ஆவேசமான மேடைப் பேச்சுகளில் ஆர்வம் காட்டாத, நடைமுறை சார்ந்த பிம்பத்தையே வெளிப்படுத்தினார்.

அவரது ஆட்சிக் காலத்தில் சில பொருளாதாரச் சீர்திருத்தங்களை அவர் ஊக்குவித்தார்; அவை மிகவும் குறைவாக இருந்தபோதிலும், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கியூபாவில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களாக அவை அமைந்தன.

அவரது அரசாங்கம் சிறிய அளவிலான தனியார் வணிகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியது, வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி அளித்தது, சில குடியேற்றக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன் சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவித்தது.

கியூபாவின் பிரமாண்டமான அரசு அமைப்பின் சில பகுதிகளை சுருக்கிய அவர், சுயதொழில் செய்வதற்கான புதிய வழிமுறைகளையும் ஊக்கப்படுத்தினார்.

இருப்பினும், இந்தச் சீர்திருத்தங்கள் 1959 புரட்சிக்குப் பிறகு நிறுவப்பட்ட ஒற்றைக் கட்சி அரசியல் அமைப்பு தொடர்ந்து நிலவி வந்த நிலையுடனேயே இருந்தன.

ராவுல் காஸ்ட்ரோ தலைமையின் கீழ், கருத்துச் சுதந்திரம், குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், அரசியல் திருப்தியாளர்கள் ஒடுக்கப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.

அவரது அதிபர் பதவிக்காலத்தின் மிக முக்கியமான தருணம் 2014 ஆம் ஆண்டில் அமைந்தது. கியூபா மற்றும் அமெரிக்கா இடையில் தொடர்ந்த அரை நூற்றாண்டு கால பகைமைக்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க தூதரக சுமூக உறவு தொடங்குவதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணைந்து ராவுல் காஸ்ட்ரோ கூட்டாக அறிவித்தார்.

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2015-ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடந்த சந்திப்பு ஒன்றில் ராவுல் காஸ்ட்ரோ மற்றும் ஒபாமா

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நெருக்கமானது, இரு நாடுகளிலும் தூதரகங்கள் மீண்டும் திறக்கப்படவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள் மற்றும் தொடர்புகள் அதிகரிக்கவும் வழிவகுத்தது. 2016-இல் ஒபாமா ஹவானாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது 1959 புரட்சிக்குப் பிறகு அதுவரை நடந்திராத ஒரு நிகழ்வாகும்.

2016-இல் ஃபிடல் காஸ்ட்ரோ இறந்தபோது, அந்த மரணச் செய்தியை தொலைக்காட்சியில் அறிவித்து, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை ராவுல் காஸ்ட்ரோ முன்னின்று நடத்தினார். தான் சோசலிச அமைப்பின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார்.

அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகளின் உறவைப் பொறுத்தவரை, பொருளாதார மற்றும் அரசியல் வெளிப்படைத்தன்மை குறித்த பல எதிர்பார்ப்புகள் குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கிப் போயின. 2018 இல் தியாஸ்-கானெலிடம் காஸ்ட்ரோ அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு, அதாவது 2017 இல் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்தவுடன் இந்த சுமுக உறவுச் செயல்பாடுகளின் ஒரு பகுதி தலைகீழாக மாறத் தொடங்கியது.

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1959-ஆம் ஆண்டில் ராவுல் காஸ்ட்ரோ அவரது சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான சோசலிச ஆட்சிமுறைக்கு வழிவகுத்த புரட்சியின் வெற்றிக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம்

ஃபிடல் மற்றும் சே குவேராவின் போராட்ட தோழர்

ராவுல் காஸ்ட்ரோ, 1931 ஜூன் 3 அன்று, கியூபாவின் கிழக்குப் பகுதியான பிரான் என்ற இடத்தில், காலிசியாவிலிருந்து குடியேறிய ஏஞ்சல் காஸ்ட்ரோ மற்றும் லினா ரூஸ் தம்பதியினரின் மகனாக வசதிமிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.

தனது சகோதரர் ஃபிடலைப் போலவே, அவரும் தனது இடைநிலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர ஹவானாவுக்குச் செல்வதற்கு முன்பு, சாண்டியாகோ டி கியூபாவில் உள்ள மதப் பள்ளிகளில் பயின்றார்.

1940களின் பிற்பகுதியிலும் 1950களின் முற்பகுதியிலும், அவர் கார்லோஸ் பிரியோ சோகர்ராஸ் அரசாங்கத்திற்கும், பின்னர் ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவின் சர்வாதிகாரத்திற்கும் (1952-58) எதிராக நடைபெற்ற போராட்ட இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் கியூப தேசியவாதத்துடன் அதிகம் பிணைக்கப்பட்ட அரசியல் பின்னணியைக் கொண்ட ஃபிடல் காஸ்ட்ரோவைப் போலன்றி, ராவுல் சோவியத் பாணி சோசலிசத்தின் மீது ஈர்ப்பை வளர்த்துக் கொண்டார்.

வரலாற்றாசிரியர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களின்படி, அவர் மக்கள் சோசலிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவில் சேர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் கூட்டங்களில் பங்கேற்றார். இந்த அனுபவங்கள் அவரது அரசியல் கண்ணோட்டத்தில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தின.

1953-ஆம் ஆண்டில், பாடிஸ்டாவிற்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஆயுதப் போராட்டத்தில் இணைந்தபோது, புரட்சிகரப் போரில் அவர் அதிகாரப்பூர்வமாக நுழைந்தார்.

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாடிஸ்டா ஆட்சியை வீழ்த்திய தனது சகோதரர் ஃபிடல் மற்றும் பிற கொரில்லாப் போராளிகளுடன் ராவுல் காஸ்ட்ரோ (தலைகுனிந்தபடி நடுவில் அமர்ந்திருப்பவர்)

தனது 22 வயதிலேயே, சாண்டியாகோ டி கியூபாவில் உள்ள மொன்காடா ராணுவ முகாம் மீதான தாக்குதலில் ராவுல் பங்கேற்றார். இந்தத் தாக்குதல் தோல்வியில் முடிந்து, டஜன்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு காஸ்ட்ரோ சகோதரர்கள் சிறையிலடைக்கப்பட்ட போதிலும், பிற்காலத்தில் கியூபப் புரட்சியின் முக்கியத் தோற்றுவிப்புக் கதைகளில் ஒன்றாக மாறியது.

1956 இல் பொதுமன்னிப்புப் பெற்று விடுதலையான பிறகு, ராவுல் தன் சகோதரர் ஃபிடலுடன் மெக்சிகோவிற்குப் புறப்பட்டார். அங்கே, கியூபாவில் இருந்து வெளியேறிய பிற போராட்ட வீரர்களுடனும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த எர்னஸ்டோ "சே" குவேராவுடனும் இணைந்து, 'கிரான்மா' படகு மூலமான கடல்வழிப் பயணத் திட்டத்திற்கான தயாரிப்புகளில் அவர் பங்கேற்றார்.

கிரான்மா படகு கியூபாவில் தரையிறங்கிய நிகழ்வு, 'சியரா மேஸ்த்ரா' மலைப்பகுதி கொரில்லா போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது. இப்போராட்டமே இறுதியாக பாடிஸ்டா ஆட்சியின் வீழ்ச்சிக்கும், ஜனவரி 1, 1959 அன்று புரட்சியின் வெற்றிக்கும் வழிவகுத்தது.

ஃபிடல் காஸ்ட்ரோவின் நிழலில் வாழ்ந்த ராணுவ ஜெனரல்

1959-ஆம் ஆண்டு முதல் தனது சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புதிய ஆட்சியில் ராவுல் காஸ்ட்ரோ மிக விரைவிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

அதே ஆண்டில் அவர் புரட்சிகர ஆயுதப் படைகளின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் அவர் வகித்த இந்தப் பொறுப்பின் மூலமாக, லத்தீன் அமெரிக்காவிலேயே மிக வலுவான ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் ஒன்றை அவர் கட்டியெழுப்பினார்.

அக்காலகட்டத்தில், கியூபா அரசியல் அமைப்பின் உள்நாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்பைக் கொண்டவராகவும், ஃபிடல் காஸ்ட்ரோவின் வலது கரமாகவும் ராவுல் காஸ்ட்ரோ செயல்பட்டார் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தனது சகோதரரின் சர்வதேச அளவிலான புகழுக்கும் வசீகரிக்கும் தலைமைத்துவப் பாணிக்கு மாறாக, ராவுல் காஸ்ட்ரோ ஆயுதப் படைகளின் கட்டுப்பாடு மற்றும் அரசு நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, எளிமையான மற்றும் விவேகமான பிம்பத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1978-இல் காஸ்ட்ரோ சகோதரர்கள்

புதிய அரசியல் அமைப்பின் ஆரம்ப தசாப்தங்களில், சோவியத் யூனியனுடனான கூட்டணியை வலுப்படுத்துவதிலும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு கியூபாவின் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதிலும் ராவுல் காஸ்ட்ரோ முக்கியப் பங்கு வகித்தார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

புரட்சியின் எதிரிகளாகக் கருதப்படுபவர்களை ஒடுக்குவதிலோ அல்லது அகற்றுவதிலோ சற்றும் தயங்காத கியூபா அரசாங்கத்தின் மிகக் கடுமையான நபர்களில் ஒருவர் என கியூபாவில் இருந்து வெளியேறியவர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கூறுகின்றனர்.

ராவுல் காஸ்ட்ரோ ஆயுதப் படைகளின் தலைவராக இருந்தபோது, 1996 பிப்ரவரி 24 அன்று, கடல் வழியாக அமெரிக்காவிற்குத் தப்பிச் செல்லும் அகதிகளுக்கு உதவுவதற்காகக் கியூபாவின் அருகிலுள்ள கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த 'ஹெர்மனோஸ் அல் ரெஸ்கடே' என்ற அமைப்பின் இரண்டு சிறிய விமானங்களைக் கியூபாவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.

இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். விமானங்கள் தங்கள் தீவின் வான்வெளிக்குள் அத்துமீறியதாக கியூபா அரசாங்கம் கூறியபோதிலும், அவை சர்வதேச வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சர்வதேச விசாரணைகள் முடிவு செய்தன. இது கியூபா மற்றும் அமெரிக்கா இடையே கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டு சிறிய விமானங்களில் ஒன்றை இயக்கிய கார்லோஸ் கோஸ்டா, அந்தத் தாக்குதலில் உயிரிழந்த 'சகோதரர்கள் மீட்பு' அமைப்பைச் சேர்ந்த நான்கு செயல்பாட்டாளர்களில் ஒருவர் ஆவார்

தற்போது அமெரிக்கா அறிவித்துள்ள குற்றச்சாட்டு, இந்தச் சம்பவத்தை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது.

அமெரிக்க ஊடகங்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒலிப்பதிவுகளில், "விமானங்களைச் சுட்டு வீழ்த்துங்கள்" என்ற வாக்கியங்கள் உட்பட, அந்தச் சிறிய விமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ராவுல் காஸ்ட்ரோ உத்தரவிடுவது போன்ற அவரது குரல் பதிவாகியுள்ளது.

இந்த ஆதாரங்கள் தற்போதைய சட்டப் போராட்டத்தில் மிகவும் முக்கியமானதாக அமையக்கூடும்.

ஓய்வுக்குப் பிந்தைய அதிகாரம்

2018-ஆம் ஆண்டில் ராவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவியை மிகேல் தியாஸ்-கானெலிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்த போதிலும், கியூப அரசாங்கத்தின் மிக உயரிய அதிகாரமிக்க பதவியான கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் 'முதல் செயலாளர்' பொறுப்பில் தொடர்ந்து நீடித்தார். இதுவே அந்த ஆட்சியமைப்பிற்குள் மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட பதவியாகும்.

2021-ஆம் ஆண்டில் இந்தப் பதவியையும் அவர் தியாஸ்-கானெலிடம் ஒப்படைத்தபோது, 1959-ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்து வந்த புரட்சியின் "வரலாற்றுத் தலைமுறை" ஒன்றின் குறியீட்டு ரீதியிலான நிறைவு என கியூபா அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இருப்பினும், கியூபாவின் ராணுவம், பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான உறவுகள் போன்ற முக்கிய மூலோபாய முடிவுகளில் ராவுல் காஸ்ட்ரோ தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருவதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.

தனது அதிகாரப்பூர்வ ஓய்வுக்குப் பிறகும், ராணுவ அணிவகுப்புகள் மற்றும் புரட்சிகர நினைவு தினங்கள் போன்ற ஆட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வந்தார்; பெரும்பாலும் டியாஸ்-கானல் மற்றும் அந்த ஒற்றைக் கட்சி அரசின் தலைமைப் பொறுப்பாளர்களுடன் இணைந்தே அவர் இந்நிகழ்வுகளில் தோன்றினார்.

அமெரிக்கா, கியூபா, ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2026 மே 1 தொழிலாளர் தின அணிவகுப்பில் தியாஸ்-கானெலுடன் இணைந்து பங்கேற்ற ராவுல் காஸ்ட்ரோ

2021 ஜூலை 11 அன்று, அந்தத் தீவு நாட்டில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் இல்லாத மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன. அப்போது கியூபா அரசாங்கம் ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்து சிறையிலடைத்தது.

தியாஸ்-கானெல் அதிகாரப்பூர்வமான பதிலடி நடவடிக்கைகளை வெளிப்படையாக முன்னின்று நடத்திய போதிலும், பல தசாப்தங்களாக ராவுல் காஸ்ட்ரோ தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்டுப்பாட்டு அமைப்புகளே இதில் தீர்க்கமான பங்காற்றின என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், கியூபா தனது மிகக் கடுமையான நெருக்கடிக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்கா விதித்த கடுமையான தடைகள், பெருந்தொற்றின் பொருளாதாரத் தாக்கம், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி மற்றும் எரிசக்தி நெருக்கடி ஆகியவை பல தசாப்தங்களாக அந்தத் தீவு நாடு சந்தித்து வந்த பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியை மேலும் மோசமாக்கின. இதன் விளைவாக மக்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறினர்; மதிப்பீடுகளின்படி, கியூபா தனது மக்கள் தொகையில் 20% வரை இழக்கும் நிலைக்கு இது தள்ளியது.

இதற்கிடையில், ராவுல் காஸ்ட்ரோவின் குடும்ப வட்டம் கியூபாவின் முதன்மையான அதிகார மையங்களில் ஒன்றாக உள்ளது. அவரது பேரனும் பாதுகாப்பு அதிகாரியுமான, "எல் காங்ரேஹோ" என்று அழைக்கப்படும் ராவுல் கிலெர்மோ ரோட்ரிக்ஸ் காஸ்ட்ரோ, வாஷிங்டன் மற்றும் ஹவானா இடையே சமீபத்தில் நடந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

காஸ்ட்ரோ பொதுவெளியில் தோன்றிய கடைசி நிகழ்வு, பாரம்பரியமாக நடைபெறும் மே 1 தொழிலாளர் தின அணிவகுப்பாகும். இந்த ஆண்டு அவர், தனது ராணுவ சீருடையை அணிந்து, தியாஸ்-கானெல் மற்றும் கியூபா அரசாங்கத்தின் பிற முக்கியத் தலைவர்களுடன் அவர் இணைந்து பங்கேற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு