படித்து, வேலையில் இருந்தும் இந்திய நடுத்தர மக்களின் வாழ்க்கை ஏன் சிக்கலில் உள்ளது?

வேலை இல்லை, செலவு அதிகம்: சிக்கலில் இந்திய நடுத்தர வர்க்கம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சௌரப் மூகர்ஜி & நந்திதா ராஜ்ஹன்சா
    • பதவி,
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நவி மும்பையில் உள்ள ஓர் இருண்ட கட்டுப்பாட்டு அறையில், சுமார் 100 பணியாளர்கள், இந்தியா முழுவதும் உள்ள 30,000 ஏடிஎம்-களை கண்காணிக்கும் தானியங்கி தொழில்நுட்பங்களைக் கண்காணித்து வருகின்றனர். முன்னொரு காலத்தில் சுமார் 60,000 பாதுகாவலர்கள் தேவைப்பட்ட பணிகளைச் செய்வதற்கு, இந்தத் தொழில்நுட்பங்கள் கேமராக்கள், உணர் கருவிகள் மற்றும் தானியங்கி செயலிகளைப் பயன்படுத்துகின்றன.

இந்தக் கட்டுப்பாட்டு அறை, நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

தானியங்கி தொழில்நுட்பங்கள் பல வேலைவாய்ப்புகளை மெல்ல மெல்ல மாற்றியமைத்து வருகின்றன. பல சூழல்களில், நடுத்தர வர்க்க மக்கள் நிலையான வருமானத்திற்காகச் சார்ந்திருந்த வேலைவாய்ப்புகளை இவை முற்றிலுமாக நீக்கி வருகின்றன.

இந்த மாற்றம் தங்கள் எதிர்காலத்திற்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பலரும் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர்.

வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் நிலையற்றதாக மாறி வருவதால், பலரும் தங்கள் செலவுகளைச் சமாளிக்கவும் பணம் சம்பாதிக்கவும் அபாயம் நிறைந்த வழிமுறைகளை நாடி வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, ராஜஸ்தானின் பில்வாராவுக்கு அருகிலுள்ள ஓர் ஊரைச் சேர்ந்த 27 வயதான பி.டெக் பட்டதாரியான வி.எஸ்.

இவர் ஒரு சுயாதீன விற்பனையாளராக மாதம் 14,000 ரூபாய் சம்பாதிக்கிறார். கடந்த ஆண்டில், பங்குச் சந்தையில் பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டதன் மூலம், அவர் தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சேமிப்புத் தொகையான 13 லட்சம் ரூபாயை இழந்தார்.

இந்த நிலையில் இருப்பது அவர் ஒருவர் மட்டுமே அல்ல. இந்தியாவில் சுமார் 90 லட்சம் பேர் இதேபோன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இவர்கள் அனைவரும் இணைந்து ஆண்டுதோறும் 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இழந்து வருகின்றனர். இந்தத் தொகையானது, கல்வித் துறைக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கும் மொத்த நிதிக்கு ஏறக்குறைய இணையானது.

இவர்கள் சூதாட்டக்காரர்கள் அல்ல. இவர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள், ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற கனவுகளைக் கொண்டவர்கள். ஆனால், தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான பாதுகாப்பான வாய்ப்புகள் இவர்களுக்குப் போதுமான அளவில் கிடைப்பதில்லை. அதனாலேயே இவர்கள் இத்தகைய அபாயங்களைத் துணிந்து ஏற்கின்றனர்.

இதேபோல, உணவு டெலிவரி செயலி ஒன்றில் விநியோக முகவராகப் பணியாற்றும் ராகுல் சிங் என்பவரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர் பெற்ற கடன்கள், வீட்டைப் புதுப்பிப்பதற்காக மட்டுமின்றி, "வாடகை, மருத்துவச் செலவுகள், உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமானதாக அமைந்த வேறு ஏதேனும் எதிர்பாராத செலவுகள் போன்ற அத்தியாவசிய செலவுகளைச் சமாளிப்பதற்காகவும்தான்" என்று அவர் கூறினார்.

வி.எஸ், ராகுல் சிங் ஆகியோர் இந்தியாவின் பரந்து விரிந்த நடுத்தர வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். மேலும் அவர்களுடைய சமூக, பொருளாதாரப் பின்னணிகளும் வெவ்வேறானவை. ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தன்மை பெரிதும் ஒத்துப் போகின்றன.

வேலை இல்லை, செலவு அதிகம்: சிக்கலில் இந்திய நடுத்தர வர்க்கம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

தனிப்பட்ட விஷயம் அல்ல

இவை வெறும் தனிப்பட்ட தவறுகளின் கதைகள் மட்டுமல்ல. இவை ஒரு பெரிய மக்கள் குழு எதிர்கொள்ளும் அழுத்தத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

அதாவது, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ஈட்டும் சுமார் 4 கோடி வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் அழுத்தத்தை இவை உணர்த்துகின்றன. இந்திய பொருளாதாரத்திற்கு இந்த மக்கள் தொகை மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு புதிய புத்தகத்திற்காக ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, இந்த மக்கள் குழுவுக்கு ஏதோவொன்று தவறாக நடந்து கொண்டிருப்பதும், அது ஒரே நேரத்தில் பல வழிகளில் நிகழ்ந்து கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

பொறியியல் அல்லது வணிகவியல் படித்த பிறகு மக்கள் பெறக்கூடும் என எதிர்பார்த்த அலுவலகப் பணிகள் போன்ற வேலைவாய்ப்புகள் தற்போது பெரியளவில் வளர்ச்சி அடைவதில்லை.

'நாக்ரி ஜாப்ஸ்பீட்க் இண்டெக்ஸ்' தரவுகளின்படி, இந்தத் துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 2020க்கு முன்பிருந்த 11 சதவிகிதத்தில் இருந்து தற்போது வெறும் ஒரு சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இந்தப் பிரச்னை செயற்கை நுண்ணறிவு காரணமாக மட்டுமே தொடங்கவில்லை. 2000களின் முற்பகுதியில் இருந்தே தானியக்கமாக்கல் (இயந்திரங்கள் மனிதர்களின் பணிகளைச் செய்தல்) செயல்முறையானது, அலுவலக எழுத்தர்கள், கணக்குப் பராமரிப்பாளர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் போன்ற பல இடைநிலை வேலைவாய்ப்புகளை மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டே வருகிறது. இவையனைத்தும் பல பட்டதாரிகள் முன்பு எளிதாகப் பெற்று வந்த வேலைவாய்ப்புகளாகும்.

தற்போது, செயற்கை நுண்ணறிவு இந்தப் பிரச்னையை மேலும் மோசமாக்குவதுடன், விளைவுகளின் வேகத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

பட்டதாரிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும், சுமார் 80 லட்சம் பணியாளர்கள் பணிபுரியும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையானது தற்போது வேலைவாய்ப்புகளைக் குறைத்து வருகிறது.

அரசின் திட்டமிடல் அமைப்பான 'நிதி ஆயோக்' 2031-ஆம் ஆண்டுக்குள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு காரணமாக ஏறக்குறைய 30 லட்சம் வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகக்கூடும் என்று கூறுகிறது.

வேலை இல்லை, செலவு அதிகம்: சிக்கலில் இந்திய நடுத்தர வர்க்கம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் சிலவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள், ஊதிய செலவுகளை மூன்றில் ஒரு பங்கு குறைப்பதற்காகத் தாங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 80 லட்சம் புதிய பட்டதாரிகள் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைகின்றனர். இது இந்தச் சூழலை இன்னும் சிக்கலானதாக மாற்றுகிறது.

இதன் தாக்கம் இப்போதே தென்படத் தொடங்கியுள்ளது. நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், ஒரு காலத்தில் வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் உறுதியான பாதையாகவும் கருதப்பட்ட ஐஐடி மும்பையில் படித்து தற்போது வேலையில் சேர்ந்துள்ள புதிய பட்டதாரிகள் முந்தைய ஆண்டுகளில் படித்த மாணவர்களைவிடக் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர்.

ஐஐடி நிறுவனங்கள் அனைத்திலும் சேர்த்து, மொத்தம் 21,500 பட்டதாரிகளில் சுமார் 8,000 பேர் இன்னும் வேலையில்லாமல் இருக்கின்றனர். முன்னொரு காலத்தில், ஐஐடி பட்டம் என்பது வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு "பொன்னான வாய்ப்பாக" கருதப்பட்டது. ஆனால் இப்போது அது, வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஒரு "லாட்டரி சீட்டை" போலவே உணரப்படுகிறது.

வேலை கிடைத்தவர்களுக்குக் கூட, மற்றொரு சிக்கல் காத்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல மோசமடைந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், வருமான வரி செலுத்தும் ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் சராசரி ஆண்டு வருமானம் சுமார் 50,000 ரூபாய் என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளது. இது ஏறக்குறைய ஒரு நல்ல ஸ்மார்ட்ஃபோனின் விலைக்குச் சமம். இது ஒரு பொருளாதார வளர்ச்சியாகத் தோன்றலாம். ஆனால் அதிகரித்து வரும் அன்றாடச் செலவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த வருமான உயர்வு உண்மையில் போதுமானதாக இல்லை.

வாழ்க்கைச் செலவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஓர் எளிய மதிய சைவ உணவின் விலை ஒவ்வோர் ஆண்டும் 11% உயர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடிப்படை ரகத்தைச் சேர்ந்த கார் அல்லது இருசக்கர வாகனத்தின் விலை ஆண்டுதோறும் 7 முதல் 8 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. மருத்துவச் செலவுகள் இதை விடவும் வேகமாக, ஆண்டுக்கு சுமார் 14% என்ற அளவில் உயர்ந்து வருகின்றன.

வேலை இல்லை, செலவு அதிகம்: சிக்கலில் இந்திய நடுத்தர வர்க்கம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

அதிகரிக்கும் கடன்

இந்தியாவில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் பணத்தை எப்படிச் செலவிடுகிறது என்பதை அடிப்படையாக கொண்ட கணக்கீட்டின்படி வாடகை (10-13%), உணவு (7-9%), சுகாதாரம் (சுமார் 14%), கல்வி (8-10%) ஆகியவற்றின் மதிப்பீட்டில் இருந்து, ஒவ்வொரு எட்டு ஆண்டுகளுக்கும் வாழ்க்கைச் செலவுகள் இரு மடங்காவது தெரிகிறது. இதன் பொருள், நடுத்தர வர்க்கத்தினருக்கான உண்மையில் அவர்கள் அனுபவிக்கும் பணவீக்கம் சுமார் 9 சதவிகிதமாகும்.

ஆகவே, 2016இல் 10 லட்சம் ரூபாயில் வசதியாக வாழ்ந்த ஒரு குடும்பத்திற்கு, இப்போது ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஆனால் அவர்களின் சம்பளம் பெரும்பாலும் அப்படியேதான் இருக்கிறது. இது ஒவ்வோர் ஆண்டும் வேகம் அதிகரித்துக் கொண்டே போகும் ஒரு டிரெட்மில்லில் ஓடுவதைப் போன்றது.

இதன் காரணமாக, கடன் அதிகரித்து வருகிறது.

மக்கள் சம்பாதிக்கும் தொகைக்கும் அவர்கள் செலவழிக்க வேண்டிய தொகைக்கும் இடையே இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப, பலர் கடன் வாங்குகிறார்கள். இன்று, இந்தியாவில், வருமானத்துடன் ஒப்பிடும்போது குடும்பக் கடன் (வீட்டுக் கடன்கள் தவிர்த்து) அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது.

கிட்டத்தட்ட பாதி இந்திய குடும்பங்கள் தனியார் கடன்களைப் பெற்றுள்ளன. கடன் வாங்கியவர்களில் சுமார் 67% பேர் 30 வயதுக்கு முன்பே தங்களது முதல் கடனைப் பெற்றுள்ளனர். கடன் வாங்கிய பலருக்கு, அவர்களுடைய ஆண்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 40% இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கே செலவாகிறது.

இப்படியாக கடன்கள் வாங்கப்படுவது செல்வம் சேர்ப்பதற்கோ அல்லது முதலீடு செய்வதற்கோ அல்ல. மக்கள் விடுமுறைப் பயணங்கள், ஸ்மார்ட்ஃபோன்கள், பள்ளிக் கட்டணம், மருத்துவமனை செலவுகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்காக, முக்கியமாக செலவு செய்வதற்கும் பிழைப்புக்காகவும் இந்தக் கடன்கள் வாங்கப்படுகின்றன.

வேலை இல்லை, செலவு அதிகம்: சிக்கலில் இந்திய நடுத்தர வர்க்கம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

சிக்கலில் நடுத்தர வர்க்கம்

கடன் வாங்கியவர்களில் சுமார் 5% முதல் 10% பேர், கடன் வழங்குபவர்கள் 'கடன் பொறி' என்று அழைக்கும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர்கள் புதிய கடன்களைப் பெறுகிறார்கள். அதிலிருந்து தப்பிக்கத் தெளிவான வழி ஏதும் இல்லை.

புனேவின் ஒரு முக்கிய தொழில்நுட்பப் பகுதியான ஹிஞ்சேவாடியில், பட்டப்படிப்பு மற்றும் கடன்களுடன் இருக்கும் பல இளம் பொறியாளர்கள், ஒவ்வொரு காலையும் பிபிஓ நிறுவனங்களில் நேர்காணலுக்காக வரிசையில் நிற்கிறார்கள். மாதம் சுமார் 18,000 ரூபாய் சம்பளம் தரும் எளிய டேட்டா என்ட்ரி வேலைகள் கிடைக்குமென அவர்கள் நம்புகின்றனர். களத்தில் நிலவும் எதார்த்தம் இதுதான்.

இந்தப் பிரச்னையின் விளைவுகள் அனைத்து இடங்களிலும் பரவி வருகின்றன.

இந்தியாவில், அன்றாடப் பொருட்களின் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு 11 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி, இப்போது வெறும் மூன்று சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

கார் விற்பனை வளர்ச்சியடையவில்லை. தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பிற நுகர்வுப் பொருட்களின் விற்பனை, 11% வளர்ச்சியில் இருந்து வெறும் 1-2 சதவிகிதமாகக் கடுமையாகச் சரிந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெரிய நுகர்வோர் நிறுவனங்களின் தலைவர்களிடம் நாம் பேசும்போது, அவர்கள் பெரும்பாலும் திகைப்புடனும் குழப்பத்துடனும் காணப்படுகிறார்கள்.

இந்திய நுகர்வோர் தங்கள் செலவினங்களைக் குறைத்துள்ளனர் என்பதை அவர்கள் மெதுவாக உணர்ந்து வருகிறார்கள். இது அவர்கள் பணத்தைச் சேமிக்க விரும்புவதால் நடக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களால் இனிமேல் செலவு செய்ய இயலாது என்பதால்தான்.

சரக்கு மற்றும் சேவை வரிக் குறைப்புக்குப் பிறகு, செலவினங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அதிகரித்தன. ஆனால் அந்த அதிகரிப்பு இப்போது மங்கி வருகிறது.

இது குடும்பங்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் முக்கியமானது. மக்களின் செலவினங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் சுமார் 60% ஆகும். 1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு, இந்தியாவின் வளர்ச்சி கீழ்காணும் வகையில் செயல்பட்டது.

நடுத்தர வர்க்க மக்கள் பணம் செலவழிக்கிறார்கள் – இது தேவையை உருவாக்குகிறது – தேவை வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது – வேலைவாய்ப்புகள் மீண்டும் செலவினங்களை அதிகரிக்கின்றன.

இது பல ஆண்டுகளாகச் செயல்பட்ட ஒரு வலுவான சுழற்சியாக இருந்தது. இப்போது இந்தச் சுழற்சி உடைந்து கொண்டிருக்கிறது.

இதோடு, ஒரு தீவிரமான பிரச்னையும் உள்ளது.

இந்தியா, ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் என்ற அளவில், முன்னெப்போதையும்விட அதிகமான பட்டதாரிகளை உருவாக்குகிறது. ஆனால், பட்டம் பெற்றிருப்பது இனி மக்களுக்கு வேலை கிடைக்க உதவுவதில்லை. உண்மையில், அது கடினமாகி வருகிறது. பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 29.1 சதவிகிதமாக உள்ளது. ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கத்தின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்த கல்வி, இப்போது எதிர்பார்த்த பலன்களைத் தருவதில்லை.

அரசியலில், இந்த நடுத்தர வர்க்கத்திற்கு வலுவான ஆதரவு இல்லை. 97 கோடி வாக்காளர்களில், சுமார் 4 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துபவர்கள்.

வரி செலுத்துபவர்கள் அரசின் நிதி சுமையை பகிர்ந்து கொண்டாலும் அரசியல்வாதிகளின் கவனத்தை அதிகம் பெறுவதில்லை.

அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக ஏழைகள் மீதும், நிதி திரட்டுவதற்காகப் பணக்காரர்கள் மீதும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு நவீன இந்தியாவை கட்டமைக்க நடுத்தர வர்க்கம் உதவியது. இப்போது வரும் ஆண்டுகளில் இந்தியாவால் தனது நடுத்தர வர்க்கத்தைத் தொடர்ந்து ஆதரித்துப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரிய கேள்வி.

சுருக்கமாகக் கூறுவதெனில், மக்களிடம் பணம் குறைவாக இருப்பதால் அவர்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்கிறார்கள். கல்வித் தகுதி இருந்தும் வேலைவாய்ப்புகளைப் பெறுவது கடினமாக உள்ளது. மேலும், நடுத்தர வர்க்கத்தினர் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்தச் சூழல் நாட்டின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.

சௌரப் மூகர்ஜி,நந்திதா ராஜஹன்சா ஆகியோர் "பிரேக்பாயின்ட்: தி கிரைசிஸ் ஆஃப் தி மிடில் கிளாஸ் அண்ட் தி ஃப்யூச்சர் ஆஃப் வொர்க்" நூலின் ஆசிரியர்கள் ஆவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு