காணொளி: தைவான் மீதான சீனாவின் அணுகுமுறை மாறுகிறதா?
"தைவான் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் அறிவிக்கக் கூடாது"
சீன அதிபர் ஷி ஜின் பிங் உடனான உச்சி மாநாட்டுக்கு பிறகு டிரம்ப் கூறிய வார்த்தைகள் இவை.
டிரம்பின் இந்த கருத்து, தைவான் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Fox News-க்கு அளித்த பேட்டியில், தைவான் குறித்து பேசும்போது "நாங்கள் போரை விரும்பவில்லை. தற்போதைய நிலை தொடர்ந்தால் சீனாவுக்கும் சம்மதம்தான். ஆனால் 'அமெரிக்கா நம்மை ஆதரிக்கிறது, அதனால் நமக்கு சுதந்திரம் அறிவிப்போம்' என்று யாராவது சொல்வதை நான் விரும்பவில்லை," எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கொள்கையில் மாற்றமில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
வாஷிங்டனுக்குத் திரும்பும்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தைவான் குறித்து ஷி ஜின்பிங் உடன் நிறைய பேசியதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும் "ஷி ஜின்பிங் தைவான் விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். தைவான் சுதந்திர இயக்கம் உருவாகக் கூடாது என்று அவர் நினைக்கிறார்" என்றார்.
ஆனால், தைவானை அமெரிக்கா பாதுகாப்பது பற்றி பேச ஷி ஜின்பிங் மறுத்துவிட்டதாகவும் டிரம்ப் கூறினார்.
சீனாவுடன் தைவான் தொடர்பாக போர் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, டிரம்ப் "இல்லை, அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் நன்றாக இருப்போம். ஷி போரை விரும்பவில்லை" என்று பதிலளித்தார்.
முன்னதாக தைவான் அதிபர் லியா சிங் டே தைவான் ஏற்கனவே தன்னை ஒரு சுயாட்சி நாடாகக் கருதுவதால், தனியாக சுதந்திரம் அறிவிக்க தேவையில்லை என்று கூறியிருந்தார்.
அமெரிக்கா நீண்ட காலமாகவே தைவானை ஆதரித்து வருகிறது. அதில், தைவான் தற்காப்புக்கு தேவையான உதவிகளை வழங்கும் சட்டப்பூர்வ பொறுப்பும் அமெரிக்காவுக்கு உள்ளது. ஆனால் அதே நேரத்தில், சீனாவுடன் தூதரக உறவைத் தொடர்ந்து பராமரிக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது.
சீனா தைவானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. தேவையானால் வலுக்கட்டாயமாக கைப்பற்றுவதையும் மறுக்கவில்லை.
அமெரிக்காவின் நிலையான கொள்கை என்னவெனில், தைவானின் சுதந்திரத்தை அது ஆதரிக்காது. மேலும், "ஒரே ஒரு சீன அரசு" என்ற கொள்கையை ஏற்றுக்கொள்வதே சீனாவுனான உறவைத் தொடரும் அடிப்படை நிபந்தனையாகும்.
தைவான் மக்கள் பலரும் தங்களை தனி நாட்டினராகவே கருதுகின்றனர். இருப்பினும், பெரும்பாலானோர் சீனாவிலிருந்து அதிகாரப்பூர்வ சுதந்திரம் அறிவிக்காமலும், சீனாவுடன் இணையாமலும் இருப்பதையே விரும்புகின்றனர்.
சீன அரசு ஊடகங்களின் தகவலின்படி, "பேச்சுவார்த்தையில், தைவான் பிரச்னை என்பது சீனா-அமெரிக்க உறவுகளில் மிக முக்கியமான விஷயம். இது தவறாக கையாளப்பட்டால், இரண்டு நாடுகளும் நேரடி மோதலுக்குச் செல்லலாம்," என்று ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.
சமீப ஆண்டுகளில், சீனா தைவானைச் சுற்றி தனது இராணுவப் பயிற்சிகளை அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில், டிரம்ப் நிர்வாகம் தைவானுக்கு 11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனை திட்டத்தை அறிவித்தது. அதில் மேம்பட்ட ராக்கெட் ஏவுதளங்கள் மற்றும் பல்வேறு ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. இதை சீனா கடுமையாக எதிர்த்தது.
அமெரிக்காவுக்கு தைவானுடன் அதிகாரப்பூர்வ தூதரக உறவு இல்லை. வழக்கமாக அமெரிக்க அதிபர்கள் தைவான் தலைவருடன் நேரடியாக பேசுவதில்லை; அப்படி நடந்தால் சீனாவுடன் கடுமையான பதற்றம் உருவாகலாம்.
தைவானின் துணை வெளியுறவு அமைச்சர் சென் - மிங்-சி Chen Ming-chi, டிரம்பின் கருத்துகளின் சரியான அர்த்தத்தை தெளிவுபடுத்த வேண்டியிருப்பதாக கூறினார்.
"அமெரிக்கா-தைவான் ஆயுத விற்பனை அமெரிக்க சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட ஒன்று. தைவான்-அமெரிக்க ஆயுத ஒப்பந்தங்கள், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையின் முக்கிய அடித்தளமாக இருந்து வருகின்றன." என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தைவான் அதிபர் லாய் சிங்-டே-ன் செய்தித்தொடர்பாளர், "அமெரிக்க ஆயுத விற்பனைகள் அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிப்பாட்டின் ஒரு பகுதி என்றும், பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டு தடுப்பு நடவடிக்கை என்றும் Reuters செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
முன்னதாக, 2025 பிப்ரவரியில், அமெரிக்க வெளியுறவு துறை தனது இணையதளத்தில் இருந்து "தைவான் சுதந்திரத்தை அமெரிக்கா ஆதரிக்காது" என்ற வரியை நீக்கியது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



