You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, வேங்கைவயல்: பட்டியல் பிரிவு மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. களத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த சமீபத்திய தகவல்களை சுருக்கமாக இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் - வாக்களித்த திரைத்துறையினர்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், திரிஷா, தனுஷ், இளையராஜா, சூர்யா, ஜோதிகா, பிரதீப் ரங்கநாதன், விக்ரம், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அட்லி, பா. ரஞ்சித், கார்த்திக், அர்ஜூன் போன்ற திரைத்துறையினர் வாக்களித்தனர்.

  2. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் - 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவு

    தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  3. வேங்கைவயல்: பட்டியல் பிரிவு மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் தங்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி பட்டியலின மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது.

    இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருந்தது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த வழக்கு புதுக்கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மார்ச் மாதம் 3 பேருக்கும் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் கிராம மக்களையே அரசும் சிபிசிஐடி போலீசாரும் குற்றம் சாட்டியுள்ளதாகவும் தங்கள் கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் மீதே சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறி, பட்டியலின மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், அந்த கிராமத்தில் நுழைவுவாயில் பகுதியிலும் அவர்கள் கருப்பு கொடியேற்றி உள்ளனர்.

    எனினும், அங்கு சுமார் 5 பேர் வரை வாக்களித்துள்ளனர்.

    தொடர்ந்து, பட்டியலின மக்களுடன் காவல்துறை அதிகாரிகளும் வருவாய்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  4. நாங்குநேரி அருகே தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள 290-வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் யாரும் வாக்கு செலுத்த வராததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கடந்த மார்ச் 2-ம் தேதி இரவு பெரும்பத்து மெயின் ரோட்டில் இந்திரா காலணியை சேர்ந்த ஜான் மார்க், வட மாநில தொழிலாளர் திரிநாத்கட்டா ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர், மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை என்று கூறி தேர்தல் புறக்கணிப்பு நடத்தப் போவதாக கிராம மக்கள் முன்பே அறிவித்திருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக தெருக்களில் கருப்பு கொடியேற்றியும் பதாகை வைத்தும் தேர்தல் புறக்கணிப்பை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அங்குள்ள வாக்குச்சாவடியில் 471 ஆண் வாக்காளர்களும் 498 பெண் வாக்காளர்கள், ஆக மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ள நிலையில், கிருஷ்ணன்புதூரை சேர்ந்த ஷீலா என்ற பெண் மட்டுமே இன்று வாக்களித்துள்ளார். அப்போது கிராம மக்கள் அப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். போலீசார் தலையிட்டு அப்பெண்ணை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

    மற்ற வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.

  5. ஸ்டாலின், பழனிசாமி, சீமான், விஜய் வாக்களித்த காட்சி

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் வேட்பாளர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாக்களித்தனர்.

  6. வாணியம்பாடியில் திமுக - தவெக கட்சியினர் மோதல்

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் இடையேயான மோதல் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    'கள்ள ஓட்டு போடப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் தலைமையிலான நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, 'கள்ள ஓட்டு போட்டவர் யார் என்பது சிசிடிவி பதிவு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதி அளித்தார்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.

  7. வாக்காளர்களை வரவேற்ற ரோபோ

    தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு வாக்குச் சாவடிகளில் ரோபோ வாக்காளர்களை வரவேற்றது.

  8. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்: 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவு

    தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  9. ராமநாதபுரம்: வாக்காளர்களின் செல்போன்களை சேகரித்த அதிகாரிகள்

    ராமநாதபுரம் நகர் பகுதியில் வாக்களிப்பதற்கு முன்பாக வாக்காளர்களிடம் செல்போன்களை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர் திரும்ப வழங்கப்படுகின்றது.

    தேர்தலில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் மையத்துக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று வாக்குப் பதிவு செய்வதை வீடியோவாக பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தனர்.

    இந்நிலையில், ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் அலுவலர்கள் தன்னார்வலர்களை பணியில் அமர்த்தி வாக்கு மையத்துக்கு செல்வதற்கு முன்பு வாக்காளர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துவிட்டு வாக்கு செலுத்த அனுமதிக்கின்றனர்.

    வாக்கு செலுத்திய பின்னர் அவர்களுடைய செல்போன் நம்பரை கூற சொல்லி, அதனை சரிபார்த்து செல்போன்களை உரியவரிடம் ஒப்படைக்கின்றனர்.

  10. தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குப்பதிவு

    காலை 9 மணிநிலவரப்படி, தமிழ்நாட்டில் 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், காலை 9 மணிநிலவரப்படி, தமிழ்நாட்டில் 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  11. மு.க.ஸ்டாலின், கமல் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் மனைவி துர்கா, மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன் இன்பன் உதயநிதியுடன் வந்து, சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    ஸ்டாலின் இத்தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தன் மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது. கமல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.

  12. சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய் வாக்களித்தார்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.

    2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் தனித்து இத்தேர்தலில் போட்டியிடுகிறது. 233 தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எடப்பாடி தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை அக்கட்சி ஆதரிக்கிறது.

    அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

  13. மேற்குவங்கம்: முதல்கட்டமாக 152 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

    மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்டமாக, 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இத்தொகுதிகளில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    முதல்கட்டத் தேர்தலில், மாநிலத்தின் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் அடங்கியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இக்கட்டத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமாகும். இதில் சுமார் 1 கோடியே 85 லட்சம் ஆண்கள், 1 கோடியே 75 லட்சம் பெண்கள் மற்றும் 465 மூன்றாம் பாலின வாக்காளர்கள் அடங்குவர்.

    பிடிஐ செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, 2,450 மத்திய துணை ராணுவப் படைக் குழுக்கள் (companies), அதாவது 2.5 லட்சம் படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    மேற்கு வங்கத்தின் வடக்கு மண்டலத்தில் உள்ள 54 தொகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியிருப்பதால், இந்த முதல்கட்டத் தேர்தல் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வலுப்படுத்துவதில் இப்பகுதி முக்கியப் பங்காற்றியது; மேலும், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பையும் அக்கட்சிக்கு ஏற்படுத்தித் தந்தது.

    2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இந்த முதல் கட்டத்தின் கீழ் வரும் 152 தொகுதிகளில், பாஜக 59 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 93 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.

    தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.

  14. வாக்களித்த பிரபலங்கள் - புகைப்படங்கள்

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை வாக்களித்த சில திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இதோ:

  15. கோவை சிங்காநல்லூரில் பேருந்து தட்டுப்பாடு: வாக்களிக்க சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

    கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் போதுமான பேருந்துகள் இல்லை என, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

    நேற்றிரவு முதல் இன்று காலை 7.40 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து வந்த பேருந்துகளும் எந்த ஊருக்கு செல்கின்றன என்பது தெளிவில்லாமல் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வெளிமாவட்டங்களுக்கு, தென் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

    பேருந்துகள் இல்லாததை கண்டித்து, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு பயணிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

    இருப்பினும், கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்கப்படாததால், வாக்களிக்கச் செல்லும் பொதுமக்கள் இன்னும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆம்னி பேருந்துகளில் 2,000 ஆயிரம் முதல் 3,000 வரை ஒரு நபருக்கு வாங்கப்படுவதால், பலரும் அரசு பேருந்துகளை நம்பி காத்திருக்கின்றனர். 170 பேருந்துகள் இயக்கப்படுவதாக தவறான தகவல்களை தருவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

  16. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வாக்களித்தார்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் ஒரு நிலையான அரசு, வளர்ச்சி, நலத்திட்டங்கள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணியே ஆட்சியை தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அமையும் புதிய அரசு பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அமைச்சர்கள், அதிகாரிகள்பார்த்துக்கொள்வார்கள். தமிழகத்துக்கு தேவையான கடனை வாங்கி பட்ஜெட் போடுவார்கள். வருவாய் இருந்தால் கடன் வாங்கலாம், தவறில்லை” என்றார்.

  17. எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோர் வாக்களிப்பு

    சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மனைவி கயல்விழியுடன் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கினை பதிவு செய்தார். சீமான், இந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஒற்றை விரலால் பெரும் மாறுதலை ஏற்படுத்த முடியும். வாக்களிப்பது, நம்மிடம் இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை. தலைமையை தேர்ந்தெடுக்க நம்மிடம் இருக்கும் கடைசி வாய்ப்பு. மக்கள் அதை தவறவிடக் கூடாது.” என்றார்.

  18. ராமநாதபுரம்: 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் உள்ள 188வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் மாதிரி வாக்குப்பதிவு இன்னும் நடக்கவில்லை.

    மாற்று வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து வருமாறு கட்சி பிரமுகர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்ததையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்து செல்லையாபுரம் வாக்குச்சாவடி, இருவேலி வாக்குச்சாவடி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்துக்கல்வலசை வாக்குச்சாவடி என மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

  19. அஜித் வாக்களித்தார் - காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

    தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    நடிகர் அஜித் திருவான்மியூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக தன் வாக்கை பதிவு செய்தார்.

    இதனிடையே, தமிழ்நாட்டு மக்கள் சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்ய வேண்டும் என, பிரதமர் மோதி வலியுறுத்தியுள்ளார்.

    அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை:

    தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 57,343,291 ஆகும்

    ஆண்கள்: 2,80,30,658

    பெண்கள்: 2,93,04,905

    மூன்றாம் பாலினத்தவர்: 7,728

  20. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

    தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடையும். எனினும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் பிரதானமாக திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ்-சசிகலா கூட்டணி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.

    தமிழ்நாட்டில் சுமார் 4,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.