கரூர் விவகாரம், எடப்பாடி பழனிசாமி, திமுக, பாஜக பற்றி விஜய் பேசியது என்ன?

பட மூலாதாரம், tvk
’திமுக, அதிமுக என ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்று சேர்ந்து விஜய் என்ற ஒற்றை மனிதனை எதிர்க்கிறார்கள்’ என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று ( ஏப்ரல் 21 ) மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் தமிழக வெற்றிகழகத்தின் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சென்னை நந்தனத்தில் நடைபெற்றது.
தேர்தல் பரப்புரையின் போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ”கரூரில் நான் காலதாமதமாக வந்ததுதான் விபத்துக்கு காரணம் என என் மேல் பழி போடும் முதலமைச்சர், 20 ஆண்டுகளாக கரூரில் போட்டியிட்ட ஒருவரை ஏன் கோவைக்கு அனுப்ப வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
கரூரில் என்ன நடந்தது என மக்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், திமுகவும், பாஜகவும் மறைமுக கூட்டணி என தான் தொடர்ந்து தெரிவித்து வந்ததையே மேற்கு வங்க முதலமைச்சர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
''பிரச்சனை என்றால் விஜய் வெளியே வர மாட்டார் என சொல்லும் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தைத் தவிர தமிழகத்தின் வேறு சட்டமன்ற தொகுதிகளில் நிற்க முடியுமா” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
''சொந்த தொகுதியில் தோற்று விடுவோம் என்று தவெக சின்னத்தை திருடியவர் எடப்பாடி பழனிசாமி” என அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பாஜகவில் உள்ள ஒரு மத்திய அமைச்சர் தன்னை வெறும் நடிகன் என்று சொன்னதை குறிப்பிட்டு பேசிய விஜய், “ நான் நடிகன் தான், ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கவில்லை, ஆனால் அரசியலில் இருந்துகொண்டே பலர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்
திமுக அதிமுக என ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து விஜய் என்ற ஒற்றை மனிதனை எதிர்ப்பதாக தெரிவித்த அவர், ''புதுச்சேரி போல அதிக வாக்குகளை தமிழ்நாட்டிலும் பதிவு செய்து தமிழக மக்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்றார்.















