அப்பல்லோ vs ஆர்டெமிஸ்: பூமி 58 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது?

    • எழுதியவர், ரிச்சர்ட் ஹோலிங்காம்
    • பதவி,
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த 1968ஆம் ஆண்டில், அப்பல்லோ 8 விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் புகழ்பெற்ற 'எர்த் ரைஸ் (பூமி உதயம்)' புகைப்படத்தை எடுத்தனர். இப்போது ஆர்டெமிஸ்-2 பயணத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள் 'எர்த்செட் (பூமி மறைவு)' என்ற புதிய புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், காலப்போக்கில் பூமி எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை அறிய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அப்பல்லோ 8 விண்கலத்தின் கமாண்டரான ஃபிராங்க் போர்மேன், 1968இல் தனது விண்கலத்தில் இருந்து நிலவின் மறுபக்கத்தைப் பார்த்தபோது, அதன் மேற்பரப்பு உயிரற்றதாகவும் சிதைந்த நிலையிலும் இருந்ததாகக் கூறினார்.

கடந்த 2018இல் பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணலில், "நிலவின் மேற்பரப்பு விண்கல் மோதியதால் ஏற்பட்ட பள்ளங்களாலும் எரிமலைச் சாம்பலின் எச்சங்களாலும் மிகவும் சிதைந்து போயிருந்தது. அது சாம்பல், கருப்பு அல்லது வெள்ளை ஆகிய நிறங்களில் மட்டுமே காணப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் வேறு எந்த நிறமும் அறவே இல்லை, அது நம்பவே முடியாத அளவுக்குச் சீர்குலைந்த நிலையில் இருந்தது," என்று தெரிவித்தார்.

ஆனால், அந்த விண்கலம் நிலவை நான்காவது முறையாகச் சுற்றி வந்தபோது, ஓர் அசாதாரணமான காட்சி தென்பட்டது. அதுகுறித்துப் பேசிய ஃபிராங்க் போர்மேன், "நாங்கள் மேலே நோக்கினோம். அங்கே நிலவின் மேற்பரப்புக்குப் பின்னணியாக பூமி மேலெழுந்து வருவதைக் கண்டோம். அப்போது பில் ஆண்டர்ஸ் எடுத்த புகைப்படம், மனிதகுலம் இதுவரை எடுத்த மிக முக்கியமான படங்களில் ஒன்றாகப் பிற்காலத்தில் போற்றப்பட்டது," என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலேயே நிறங்களைக் கொண்ட ஒரே வான்பொருள் பூமியாகத்தான் இருந்தது. அது ஒரு பிரமிக்கத்தக்க காட்சியாக அமைந்தது. இந்த பூமியில் வாழ்வதற்கு நாம் மிகவும், மிகவும் பாக்கியசாலிகள்," என்றார்.

அந்தப் புகைப்படம் "எர்த் ரைஸ் (பூமி உதயம்)" என்ற பெயரில் பிரபலமானது. வரலாற்றிலேயே அதிகளவில் மறுபதிப்பு செய்யப்பட்ட படங்களில் ஒன்றாக அது திகழ்ந்தது. விண்வெளியின் வெறுமை சூழ்ந்திருக்க, உயிரற்ற நிலவின் மேற்பரப்புக்கு மேலே ஒரு சிறிய, மென்மையான நீல நிற உலகமாக பூமி எழுந்து வருவதை அந்தப் புகைப்படம் சித்தரித்தது. இந்தப் படமே நவீன சுற்றுச்சூழல் இயக்கத்துக்கு உத்வேகம் அளித்தது என்றும், 1970இல் "பூமி தினம்" உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்றும் பலர் கருதுகின்றனர்.

இப்போது 58 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்டெமிஸ்-2 விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்ட நாசா வீரர்கள், "எர்த்செட் (பூமி மறைவு)" என்ற மற்றோர் அற்புதமான புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்த முறை, நிலவின் உயிரற்ற அடிவானத்துக்கு அடியில் பூமி மறைந்து போவது போன்ற காட்சியை இந்தப் புகைப்படம் காட்டுகிறது. இந்த மாதத் தொடக்கத்தில், விண்கலம் நிலவைக் கடந்து பறந்து சென்று கொண்டிருந்தபோது விண்வெளி வீரர்கள் இந்தப் படத்தை எடுத்தனர். இதற்கான பெருமை, தனிப்பட்ட ஒரு புகைப்படக் கலைஞரைச் சாராமல், விண்கலத்தில் இருந்த நான்கு உறுப்பினர்களைக் கொண்ட மொத்த குழுவையுமே சாரும் என்று நாசா அறிவித்துள்ளது.

"பூமி உதயம்", "பூமி மறைவு" ஆகிய இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவியியல் ரீதியாகப் பார்க்கும்போது, 58 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய கால அளவுதான். இருப்பினும், கடந்த சில தசாப்தங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவாக, பூமியின் மேற்பரப்பில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இருவேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகள், 1968க்கும் இன்றைய காலகட்டத்திற்கும் இடையே நமது கோள் எவ்வாறு மாறியுள்ளது என்பதை வெளிப்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

புகழ்பெற்ற 'பூமி உதயம்' புகைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்கதாக ஆனாலும், நாசாவில் யாரும் அதை எடுக்கத் திட்டமிடவில்லை என்பது ஓர் ஆச்சரியமான விஷயம். அது தற்செயலாக நிகழ்ந்தது.

'இன்ஸ்பிரேஷன்' எனப்படும் முதல் முழுமையான பொதுமக்கள் விண்வெளிப் பயணத்தின் விமானியாக இருந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சியான் பிராக்டர், "அவர்கள் அதைத் தற்செயலாகப் படம்பிடித்தார்கள், இல்லையா?" என்று கூறினார்.

அப்பல்லோ 8 பயணம், மக்கள் பூமியைப் பார்க்கும் விதத்தை மாற்றியமைத்தது என்றும், "இதுபோன்ற விஷயங்கள்தான் இப்போது நமக்குத் தேவை என்று நான் உணர்கிறேன், அதாவது அதிக உத்வேகம்," என்றும் அவர் கூறினார்.

ஆர்டெமிஸ்-2 ஏவப்பட்ட பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், 'பூமி உதயம்' போன்ற ஒரு புதிய புகைப்படம் எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்த முறை நாசா தயாராக இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. நாசாவின் ஆய்வு அமைப்புகள் மேம்பாட்டுப் பணி இயக்குநரகத்தை வழிநடத்தும் லோரி கிளேஸ், "அதைச் சாத்தியமாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்," என்றார்.

'பூமி மறைவு' (எர்த்செட்) என்று அழைக்கப்படும் தற்போதைய புதிய புகைப்படம், இந்திய நேரப்படி ஏப்ரல் 7ஆம் தேதியன்று, அதிகாலை 04:11 மணிக்கு, நிலவை ஏழு மணிநேரம் கடந்து சென்றபோது, ஓரியன் விண்கலத்தின் சாளரத்தின் வழியாக எடுக்கப்பட்டது.

நாசாவின் கூற்றுப்படி, படத்தில் காணப்படும் பூமியின் பிரகாசமான பகுதி, ஓசியானியா பிராந்தியத்தின் மீது வெண் மேகங்களையும் நீலப் பெருங்கடல்களையும் காட்டுகிறது. அதேநேரம், பூமியின் இருண்ட பகுதிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டவை. மேலும், இந்தப் படம் நிலவின் மேற்பரப்பின் மிக விரிவான அம்சங்களையும், ஒன்றன் மீது ஒன்றாகப் படிந்திருக்கும் பள்ளங்கள் மற்றும் படுகைகளையும் காட்டுவதாக நாசா கூறியது.

கடந்த 1968இல் இருந்ததைப் போலன்றி, இன்று 2026இல் பல செயற்கைக்கோள்கள் ஒவ்வொரு நாளும் பூமியின் படங்களை ஆயிரக்கணக்கில் எடுக்கின்றன. இந்தச் செயற்கைக்கோள்கள் பெருங்கடல்கள், நிலம், பனி ஆகியவற்றைக் கண்காணிக்கின்றன. அதோடு அவை, மனிதர்கள் தங்கள் கண்களால் காணக் கூடியவற்றை மட்டுமின்றி, நுண்ணலை முதல் புற ஊதா வரையிலான மின்காந்த நிறமாலையின் பல பகுதிகளிலும், பூமியைக் கவனிக்கின்றன.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தொடர்ச்சியான நேரலை காணொளிக் காட்சியும் தற்போது உள்ளது. மேலும் தானியங்கி விண்கலங்கள் நிலவில் இருந்தும் இன்னும் தொலைவில் இருந்தும் பூமியின் படங்களை எடுத்துள்ளன. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், 'பூமி மறைவு (எர்த்செட்)' புகைப்படம் செயற்கைக்கோள் இயந்திரங்களால் அல்ல, மனிதர்களால் எடுக்கப்பட்டது என்பதால் அது சிறப்பு வாய்ந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தில் அடுத்த தலைமுறை செயற்கைக் கோள்களுக்கான திட்டங்களை மேற்பார்வையிடும் கிரேக் டான்லன், படங்களை எடுக்கும்போது மனிதர்கள் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று கூறினார்.

"ஒரு மனிதரிடம் இருந்து நீங்கள் பெறும் படங்கள் ஒரு குறிப்பிட்ட சட்டகத்துக்குள் அடங்கி, ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கும். மேலும், விண்வெளி வீரர்கள் ஷட்டரை அழுத்தும்போது, ஆழ்மனதாலும் வெளிமனதாலும் சில தேர்வுகளை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய மனதின் ஒரு மூலையில் ஏதோவொன்று ஓடிக்கொண்டிருக்கிறது," என்று அவர் கூறினார்.

எளிதாகக் கூறுவதெனில், விண்வெளி வீரர்கள் ஓர் இயந்திரத்தைப் போல வெறுமனே புகைப்படம் எடுப்பதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். எதைச் சேர்ப்பது, எந்தக் கோணத்தில் படம்பிடிப்பது, எந்தத் தருணம் அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது என்பன போன்ற மானுடரீதியான தேர்வுகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

இது மக்களிடையே உணர்ச்சிகளை உருவாக்குவதாக டான்லன் கூறினார். இதுபோன்ற படங்கள் நம்மைச் சிந்திக்க வைப்பதாகவும், "ஆஹா, சரி, அங்கே ஒரு சிறிய பூமி இருக்கிறது. ஆனால் அதுதான் நாம் வாழும் இடம், அவ்வளவுதான், அதுதான் எல்லாம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பூமி உதயம் மற்றும் பூமி மறைவு புகைப்படங்கள் முக்கியமானவை. ஏனெனில் அவற்றை மனிதர்கள் எடுத்தார்கள் என்பது மட்டுமின்றி, கடந்த 58 ஆண்டுகளில் பூமி எவ்வாறு மாறியுள்ளது என்பதைக் காட்டவும் அவை உதவுகின்றன.

பல தசாப்த இடைவெளியில் எடுக்கப்பட்ட வெறும் இரண்டும் புகைப்படங்களாக இருந்தாலும், காலநிலை மாற்றம் குறித்து முக்கியமான தகவல்களை இவை நமக்கு உணர்த்துகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிரிட்டனில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தின் தேசிய பூமி கண்காணிப்பு மையத்தைச் சேர்ந்த காலநிலை அறிவியல் பேராசிரியரான ரிச்சர்ட் ஆலன், "பூமி உதயம் புகைப்படம் எடுக்கப்பட்டதில் இருந்து, வளிமண்டல கரிம வாயு அளவுகள் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளன. மேலும், உலகளாவிய வெப்பநிலை குறைந்தது ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்காவது வேகமாக அதிகரித்துள்ளது," என்று தெரிவித்தார்.

விண்வெளியில் இருந்து பார்க்கையில், பூமி காட்சியளிக்கும் விதத்தை மனித செயல்பாடுகள் மாற்றியமைத்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். நகரங்கள் விரிவடைந்து பெரிதாகியுள்ளன, அடர்ந்த காடுகள் பலவும் அழிக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக பிரகாசமான விளைநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் ஆரல் கடல் போன்ற நீர்நிலைகள் மிக மோசமாக வற்றிப்போயுள்ளன. 1960களில் ஆரல் கொண்டிருந்த பரப்பளவில், தற்போது 10 சதவிகிதத்துக்கும் குறைவான அளவே எஞ்சியுள்ளதாக அவர் கூறுகிறார்.

பூமியின் சில பகுதிகளை மேகங்கள் மறைத்து இருந்தாலும், பூமி உதயம் மற்றும் பூமி மறைவு புகைப்படங்களிலேயே இந்த மாற்றங்கள் சிலவற்றை நம்மால் காண முடிகிறது.

லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பனிப்பாறை ஆய்வாளரான பெஞ்சமின் வாலிஸ், இவ்விரு புகைப்படங்களிலும் தென்படும் ஒரு பொதுவான அம்சம் அன்டார்டிகாவும் தென் பெருங்கடலுமே என்று குறிப்பிடுகிறார்.

ஏனெனில், அந்தப் புகைப்படங்கள் பூமியின் வெவ்வேறு பகுதிகளைக் காட்டுகின்றன. "அன்டார்டிகா தீபகற்பமானது பூமியிலேயே மிக வேகமாக வெப்பமடைந்து வரும் பகுதிகளில் ஒன்று. முதல் புகைப்படத்துக்கும் சமீபத்திய புகைப்படத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், அங்குள்ள 28,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பனி அடுக்குகள் உடைந்து சரிந்துள்ளன," என்று அவர் கூறினார்.

அன்டார்டிகா பனியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், கடந்த 10,000 ஆண்டுகளில் காணப்படாத முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பூமியின் பிற உறைந்த பகுதிகளான 'கிரையோஸ்பியர்', அதாவது நீர், பனிக்கட்டி அல்லது பனி வடிவில் காணப்படும் அனைத்துப் பகுதிகளும்கூட, இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் அன்டார்டிகா ஆய்வுக் குழுவின் அறிவியல் இயக்குநரான பெட்ரா ஹெய்ல், "நாங்கள் உண்மையிலேயே சில வியத்தகு மாற்றங்களைக் கண்டுள்ளோம்," என்று கூறுகிறார். வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் இரண்டிலும், பருவகால கடல் பனியின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

மேலு, வட அமெரிக்கா, யூரேசியா, ஆசியா ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கும் காலம் தள்ளிப் போவதாகவும், பனி உருகும் காலம் முன்பைவிட விரைவாக அமைவதாகவும் அவர் கூறுகிறார்.

"கள ஆய்வுகள் மற்றும் கணித மாதிரிகளின் அடிப்படையில், இந்த மாற்றங்களில் ஏறக்குறைய 90 முதல் 95% வரை மனித செயல்பாடுகளாலேயே நிகழ்ந்தவை என உறுதியாகக் கூற முடியுமென நாங்கள் நம்புகிறோம்," என்கிறார் பெட்ரா ஹெய்ல்.

இந்த மாற்றங்கள் கவலையளிப்பதாகத் தோன்றினாலும், பூமிக்கு ஏற்படும் சேதம் இன்றளவும் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டதை நினைவில் கொள்வது அவசியம். உண்மையில், புகழ்பெற்ற 'பூமி உதயம்' புகைப்படம் எடுக்கப்பட்ட 1968ஆம் ஆண்டிலேயே, அந்தச் சேதம் விண்வெளியின் ஆழத்தில் இருந்து கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், மனிதர்கள் இந்தக் கோளுக்குத் தீங்கு விளைவித்திருந்தனர்.

'எர்த் டே நெட்வொர்க்' அமைப்பின் தலைவரான கேத்லீன் ரோஜர்ஸ், பூமி உதயம் புகைப்படம், பூமி எவ்வளவு அழகானது என்பதையும், மனிதர்கள் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள் என்பதையும் பலருக்கு உணர வைத்தது என்று கூறுகிறார்.

"அந்த நேரத்தில் லாஸ் ஏஞ்சலிஸ், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், புகைமூட்டம் மிகவும் மோசமாக இருந்ததால் சாலையின் மறுபுறம்கூட எதையும் பார்க்க முடியவில்லை. சில ஆறுகள் மிகவும் மாசுபட்டு இருந்ததால் தீப்பிடித்துக் கொண்டன," என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய ரோஜர்ஸ், "விண்வெளியில் இருந்து வெகு தொலைவில் இருந்து பார்க்கையில், பூமி கச்சிதமாகவும் அழகாகவும் காட்சியளித்தது. ஆனால் மக்கள் உற்று நோக்கியபோது, 150 ஆண்டுகால 'முன்னேற்றம்' என்று அழைத்தவற்றால் ஏற்பட்ட சேதத்தை அவர்களால் காண முடிந்தது" என்று கூறினார்.

ஆனால் அது ஒரு தலைமுறை மக்களை முன்வந்து ஓர் இயக்கத்தின் அங்கமாக மாறத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்பல்லோ 8இன் கமாண்டரான ஃபிராங்க் போர்மேன் 2023இல் காலமானார். ஆனால் அவரது பயணத்தின் தாக்கம் இன்றும் தொடர்கிறது. அவரது வார்த்தைகள் இன்றைய ஆர்டெமிஸ் விண்வெளி வீரர்களுக்கும் நம் அனைவருக்கும் இன்னும் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன.

"நாம் நிலவுக்குச் சென்று, இறுதியில் பூமியைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவோம் என்பதை நம்மில் யாரும் கவனித்ததாக நான் நினைக்கவில்லை," என்று அவர் தெரிவித்தார்.

போர்மேன் கூறியதன் பொருள் ஆழமானது: "நிலவுக்குப் பயணித்த பிறகும், விண்வெளி வீரர்கள் கண்ட மிகவும் அற்புதமான விஷயம் நிலவல்ல, நமது வீடான பூமிதான்." இந்த பூமி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது, மதிப்புமிக்கது என்பதை அவரது செய்தி இன்றும் மக்களுக்கு நினைவூட்டுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு