You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹங்கேரியில் ரஷ்ய ஆதரவு தலைவர் ஓர்பனின் 16 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது எப்படி?
ஹங்கேரியில் விக்டர் ஓர்பனின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அவர் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது. டிரம்ப் மற்றும் புடினுக்கு நெருக்கமானவராக இருந்த விக்டர் ஓர்பன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுக்ரேனுடன் இணக்கமான உறவை கொண்டிருக்கவில்லை. இவரது தோல்வியை ஹங்கேரிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி என ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லயன் கூறி உள்ளார். என்ன நடந்தது? விக்டர் ஓர்பன் தோற்கடிக்கப்பட்டது எப்படி?
ஏப்ரல் 12ஆம் தேதி நடந்த தேர்தலில் டிஸா கட்சியைச் சேர்ந்த 45 வயதான பீட்டர் மாஜார், விக்டர் ஓர்பன் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். எதேச்சதிகாரம் கொண்ட தேர்தல் அமைப்பு என குற்றம்சாட்டப்பட்ட ஆட்சிமுறையும் இதோடு முடிவுக்கு வந்திருக்கிறது.
இதையடுத்து, பீட்டர் மாஜார் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் புடாபெஸ்டில் விக்டர் ஓர்பன் தோல்வியை சிலர் மெட்ரோ ரயிலில் பாட்டு பாடி கொண்டாடுவதையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது. ரஷ்யர்களே, வீட்டுக்குச் செல்லுங்கள் என அவர்கள் முழக்கமிடவும் செய்தனர்
இந்த மாபெரும் வெற்றி ஓர்பனின், மக்கள் செல்வாக்கிழந்து வரும் உள்நாட்டுக் கொள்கைகளை மாற்ற பீட்டர் மாஜாருக்கு உதவுவதோடு, ஹங்கேரியின் உலகளாவிய உறவுகளையும் மறுசீரமைக்கும் என கருதப்படுகிறது.
விக்டர் ஓர்பன் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவராக இருந்தார். பிரசாரத்தின் போது அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நேரில் வந்து இவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
மறுபுறம், மாஜார் ரஷ்யாவிடம் இருந்து விலகி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுக்ரேனுடன் மிக இணக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதை மையமாக கொண்ட கொள்கையை முன்வைத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மக்களைத் திரட்டும் வகையில் ஹங்கேரியில் தனது வேகமாக வளர்ந்து வரும் இயக்கத்தை கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருநகரங்கள் எனப் பல இடங்களுக்கும் மாஜார் கொண்டு சென்றார்.
தேர்தல் முடிவுக்கு பின் பேசிய மாஜார், ஹங்கேரி ஐரோப்பாவின் ஆக்கபூர்வமான கூட்டாளியாக திகழும் என கூறினார்.
ஓர்பன் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட கல்வி மற்றும் சுகாதார மாற்றங்களை ரத்து செய்வதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதாகவும், கட்சி விசுவாசிகளுக்கு பலன் கொடுக்கவும், அரசு வளங்களை வீணடிக்கவும் உதவிய பரவலாக வெறுக்கப்பட்ட என்.இ.ஆர். (NER) எனப்படும் முறையை ஒழிப்பதாகவும் மாஜார் உறுதியளித்தார்.
தேர்தல் வெற்றியை 1848-ஆம் ஆண்டின் ஹங்கேரிய புரட்சி மற்றும் 1956-ல் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான கிளர்ச்சியுடன் அவர் ஒப்பிட்டார்.
தோல்வி குறித்து பேசிய விக்டர் ஓர்பன், தேர்தல் முடிவு வலி தருவதாகவும், ஆட்சி செய்யும் பொறுப்பும், வாய்ப்பும் தங்களுக்கு வழங்கடப்படவில்லை என்றும் கூறினார்.
மாஜாரை ஆதரித்த பலரும் இயல்பான ஆதரவாளர்கள் அல்ல. ஏன், பல ஆண்டுகளாக மாஜாரே, ஓர்பனை ஆதரித்து வந்தார். ஆனால், தற்போது அவரையே வீழ்த்தி இருக்கிறார்.
மாஜார் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லயன், இது ஹங்கேரிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஹங்கேரிய மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதன் மூலம், தங்கள் ஐரோப்பிய பாதையை மீட்டெடுத்துள்ளனர். இது அடிப்படைச் சுதந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார்.
ஹங்கேரியின் புதிய தலைமையுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் நலன்களில் சமநிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்குமானால், எந்தத் தரப்புடனும் உறவுகளை வளர்த்துக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு